பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள் ; அமைச்சர் பந்துல எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால்

வரிக் குறைப்பு செய்ததால் ஒரே நாளில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை. பொருளாதாரம் பாதிக்கப்பட்ட விதம் தொடர்பில் புள்ளி விபரங்களுடன் ஒப்புவிக்க எனக்கு முடியும்.

முடிந்தால் பகிரங்க விவாதத்துக்கு வாருங்கல் என அமைச்சர் பந்துல குணவர்தன எதிர்க்கட்சித் தலைவருக்கு சபையில் சவால் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) விஷேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு சவால் விடுத்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 101 (3) (1) இன் கீழ் அரசாங்கத்தின் நிதி தொடர்பான தெரிவுக்குழுவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த தெரிவுக் குழுவின் தலைவராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவே பதவி வகிக்கின்றார். அந்த அறிக்கையை நான் ஆராய்ந்து பார்த்துள்ளேன்.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இதுவரை நாடு முகங்கொடுத்திராத மிக மோசமான நெருக்கடி நிலையிலேயே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் விரிவான பொருளாதார வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு நேரிட்டுள்ளது.

நீண்ட கால பலவீனமான பொருளாதார வேலைத் திட்டங்களே 2022 ஆம் ஆண்டு மோசமான பொருளாதார நெருக்கடிக்கு காரணமானது.

அரசாங்கத்தின் நிதி வினைத்திறன் இன்மை மற்றும் வருமானத்தை முறையாக சேகரிக்காமை ஆகிய காரணங்களே நிதி நெருக்கடி அதிகரிப்பதற்கு காரணமானது.

அதிக செலவுடன் கடன் பெற்றுக் கொள்வதில் தங்கியிருந்ததன் காரணமாக அரச கடன் முறையற்ற மட்டத்திற்கு தள்ளப்பட்டது. அதன் காரணத்தால் 2022 ஆம் ஆண்டு நிறைவடையும் போது தேசிய உற்பத்தி 128 வீதமாகியது.

சர்வதேச கடன் சந்தையில் பிரவேசிக்கும் நிலை இழக்கப்பட்டதால் அரசாங்கம் அரசின் நிதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து கொள்வதற்காக தேசிய ரீதியில் கடனைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்தது.

முக்கியமாக மத்திய வங்கியிலிருந்து கடன் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதால் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிநாட்டுக் கடன்களை மீள செலுத்துவதை ஒரு தரப்பாக இடைநிறுத்த வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.

அந்நிய செலாவணி மட்டுப்படுத்தப்பட்டதால் எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசியமான பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு பொருளாதாரம் 7. 8 வீதமானது

பொருளாதார நிலை தொடர்பில் நான் முழுமையாக புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளேன். அதனை வாசித்துப் பார்க்க வேண்டும்.

அந்த வகையில் பொருளாதாரம் தொடர்பான எந்த விவாதத்திற்கும் நான் தயார். எதிர்க்கட்சித் தலைவர் விரும்பினால் இது தொடரபாக பகிரங்க விவாதத்துக்கு வந்தால் அனைத்து விடயங்களையும் புள்ளி விபரங்களுடன் தெரிவிப்பேன் என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.