200 ஆண்டுகளுக்கு முன் ஒல்லாந்தரால் சூறையாடப்பட்ட தொல்பொருட்கள் இலங்கையிடம் கையளிப்பு
கடந்த 1756 ஆம் ஆண்டு ஒல்லாந்தரால் கண்டி அரச மாளிகையை தாக்கி அங்கிருந்து சூறையாடப்பட்ட 6 தொல்பொருட்கள் நெதர்லாந்தில் இருந்து இன்று காலை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.
இவ்வாறு கொண்டுவரப்பட்ட தொல்பொருட்களில் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னரின் திருமண வாள், மன்னரின் தங்கக் கத்தி, இயந்திர துப்பாக்கி மற்றும் இரண்டு பெரிய துப்பாக்கிகள் உள்ளிட்டவை அடங்குகின்றன.
இந்த தொல்பொருட்களை நெதர்லாந்தால் இலங்கைக்கு கையளிக்கும் நிகழ்வு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விகவிக்ரமநாயக்க, இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பக், புத்த சாசன சமய கலாசார அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, அமைச்சின் மேலதிக செயலாளர் திலக் நந்தன ஹெட்டியாராச்சி, கொழும்பு தேசிய அருங்காட்சியக திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் சனுச்சிஜா கஸ்தூரி, தேசிய அருங்காட்சியக கண்காணிப்பாளர் ரஞ்சித் ஹெவகே, இலங்கை வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ஸ்ரீ ராஜீவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த தொல்பொருட்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய கோப்பு, இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவரால் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் அதனை தேசிய அருங்காட்சியக திணைக்களத்தின் பணிப்பாளரிடம் கையளித்தார்.
இந்த தொல்பொருட்களை கொழும்பு தேசிய அருங்காட்சியகத்திற்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நெதர்லாந்தில் ஒல்லாந்தரால் சூறையாடப்பட்ட இலங்கையின் தொல்பொருட்கள் பல இருப்பதாகவும், அவற்றை விரைவில் நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு மேலதிகமாக இங்கிலாந்து மற்றும் பிற வெளிநாடுகளில் ஏராளமான எமது நாட்டிலிருந்து சூறையாடப்பட்ட தொல்பொருட்கள் உள்ளதாகவும் புத்தசாசன, சமய கலாசார அமைச்சின் மேலதிக செயலாளர் திலக் நந்தன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை