அடுத்த மாதம் முதல் தடையில்லாது திரிபோஷா மா விநியோகிக்கப்படுமாம்! சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவாதம்

சுகாதாரத் துறையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளை 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சின் குழு நிலை விவாதத்தில் சுட்டிக்காட்டினேன்.

அதே பிரச்சினைகளை வியாழக்கிழமையும் சுட்டிக்காட்டுகிறேன். திரிபோஷா விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதையிட்டு கவலையடைய வேண்டும்.

திரிபோஷா பிரச்சினைக்காவது உடனடியாக தீர்வு காணுங்கள் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய சுகாதாரத்துறை அமைச்சரிடம்  வலியுறுத்தினார்.

திரிபோஷா விநியோகத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அடுத்த மாதம் முதல் தடையில்லாமல் திரிபோஷா விநியோகிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன பதிலளித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய –

பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் நாட்டின் சுகாதாரத்துறை மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.

சுகாதாரக் கட்டமைப்புடன் தொடர்புடைய நிறுவனங்களின் முறைகேடான செயற்பாடுகளால் இலவச சுகாதாரத்துறை மீதான மக்களின் நம்பிக்கை வெகுவாகச் சிதைவடைந்துள்ளது.

சுகாதாரத்துறையின் நிதி மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு பாரபட்சமின்றிய வகையில் தண்டனை வழங்க வேண்டும் அப்போது தான் இலவச சுகாதார துறை மீது மக்கள் நம்பிக்கை கொள்வார்கள். எதிர்காலத்திலும் முறைகேடான செயற்பாடுகள் இடம்பெறா.

சுகாதாரத் துறையில் தற்போது நிலவும் அடிப்படை பிரச்சினைகளை  2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் சுகாதார அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தின் போது சுட்டிக்காட்டினேன்.

ஆனால் எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கவில்லை. புதிய சுகாதாரத்துறை அமைச்சரின் நிர்வாகத்தின் கீழ் தீர்வு கிடைக்க வேண்டும் என்று  எதிர்பார்க்கிறேன்.

பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வு காண வேண்டும்.

கடந்த அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களால் திரிபோஷா விநியோகம் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளது. 3 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு திரிபோஷா வழங்கல் இடைநிறுத்தப்பட்டுள்ளமை கவலைக்குரியது. ஆகவே, திரிபோஷா விநியோகம் மீண்டும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். – என்றார்.

இதற்கு எழுந்து பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன, சுகாதாரத்துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு கட்டம் கட்டமாக தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.திரிபோஷா விநியோகத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அடுத்த மாதம் முதல் திரிபோஷா விநியோகம்  தடையின்றி முன்னெடுக்கப்படும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.