பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கேக் விற்றவர் கூடக் கைதானார்! கோவிந்தன் கருணாகரம் வேதனை
மட்டக்களப்பில் வெதுப்பகத்தில் (பேக்கரி) ”கேக் ”விற்பனை செய்த இளைஞனை மாவீரர் தினத்தை காரணம் காட்டி பொலிஸார் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இவ்வாறான நிலை தொடருமாயின் இந்த நாடு அழிந்து போகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் சபையில் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –
மட்டக்களப்பில் கடந்த வாரம் 10 இற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எனக்கு தெரிந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பில் உள்ள பேக்கரியில் வேலை செய்கின்றார். அவர் கடந்த வாரம் கேக் ஒன்றை விற்றுள்ளார். அந்த கேக்கை வாங்கிச் சென்றவர் கேக்கில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என பெயர் எழுதியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக பொலிஸார், குறிப்பிட்ட பேக்கரிக்கு சென்று சி.சி.டிவி கமராவை ஆராய்ந்துள்ளனர். அதில் அந்த இளைஞன் கேக்கை மாத்திரம்தான் கொடுத்துள்ளார். அதில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என எழுதிக்கொடுக்கவில்லை. ஆனால் அந்த இளைஞனை பயங்கரவாதத்தடை சட்டத்தின் கீழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலை தொடருமாயின் இப்படியே இந்த நாடு அழிந்து போகும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை