பஷில், கோட்டாபயவின் குடியுரிமையை நீக்க இரு கால்களையும் உயர்த்தி ஆதரவளிப்பேன் டிலான் பெரேரா பகிரங்கம்

பொருளாதாரப் படுகொலையாளிகளை உயர்நீதிமன்றம் அடையாளப்படுத்தியுள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை இரத்து செய்யும் கீழ்த்தரமான யோசனைக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டேன்.

ஏனெனில் அவர் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார்.பஷில்,கோட்டாபய உட்பட ஏனையோரது குடியுரிமையை  நீக்கும் யோசனைக்கு இரு கைகள் அல்ல இரு கால்களையும் உயர்த்தி ஆதரவு வழங்குவேன் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்  நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான  செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில்  உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

பொருளாதாரப் படுகொலையாளிகள் யார் என்பதை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது.பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களால்  நாடு வங்குரோத்து நிலை அடைந்தது என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்தத் தீர்ப்பைக் கொண்டு ஒரு தரப்பினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை இரத்து செய்யும் யோசனையை கொண்டு வந்தால் அதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்க மாட்டேன்.அந்த கீழ்த்தரமான செயலுக்குத் துணை செல்லமாட்டேன், ஏனெனில் மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டுக்கு சேவை செய்துள்ளார்.

நான் அவர் பக்கம் இனி செல்லப்போவதில்லை.அவருக்கும் எனக்கும் தற்போது எவ்வித தொடர்பும் இல்லை.ஆனால் அவர் மீதான கௌரவம் இன்றும் உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இன்றைய நிலைக்கு நாங்கள் யாரும் பொறுப்பல்லர், அவரது குடும்ப உறுப்பினர்களே அவரை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளார்கள்.

பொருளாதாரப் படுகொலையாளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ள பஷில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ உட்பட ஏனைய தரப்பினரது குடியுரிமையை பறிக்கும் யோசனை கொண்டு வந்தால் அதற்கு இரு கைகள் அல்ல இரு கால்களையும் உயர்த்தி ஆதரவு வழங்குவேன்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸஈ கிரிக்கெட் பற்றி காலையிலும் பேசுகிறார், மாலையிலும் பேசுகிறார். முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு சார்பாக பேசுகிறார். அது அவரது தனிப்பட்ட விருப்பம்.

கிரிக்கெட் விவகாரத்தில் அவசரப்பட வேண்டாம். அவ்வாறு செயற்பட்டால் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் என்று நான் கடந்த ஓகஸ்ட் மாதம்  சபையில் குறிப்பிட்டேன். அதுவே தற்போது இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் ஆண்டு முதல் காலாண்டு பகுதிக்குள் டி20 போட்டி  இடம்பெறவுள்ளது. அதற்கு முன்னர்  கிரிக்கெட் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.

அதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள தேர்தல் என்ற விளையாட்டில் மக்கள் விளையாடுவார்கள். அதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அதற்கு  ஆளும் மற்றும் எதிர்தரப்பினர் தயாராக வேண்டும்.

காஸாவில் போர் குற்றங்கள் இடம்பெறுகின்றன.அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சர்வதேச போர் சட்டங்களை மீறுகிறார். பலஸ்தீனர்களுக்கு ஆதரவு  தெரிவித்து நான் குரல் கொடுப்பேன். பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் சால்வையை சபையில் அணிவேன். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.