முஸ்லிம் பள்ளிவாசல்களை புதிதாக பதிவுசெய்வதில் பிரச்சினை இல்லை! அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பகிரங்கம்
பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களை பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொள்வதில் பிரச்சினை இல்லை. அரபுக் கல்லூரி தொடர்பான ஆவணங்களுக்கு பாதுகாப்பு அமைச்சால் அனுமதி கிடைக்கப்பெற்றால் பதிவு செய்ய முடியும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.
நாடளுமன்றத்தில் இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மஹ்ரூப், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் உரையாற்றும்போது கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது எம்.எஸ். தௌபீக் எம்.பி தெரிவிக்கையில்,
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், முஸ்லிம் பள்ளிவாசல்கள், அரபுக் கல்லூரிகள் முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் பதிவு செய்வதில்லை. அதேபோன்று முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் தற்போது ஆளணி பற்றாக்குறை இருந்து வருகிறது. அதனால் அங்கு பணிகள் முறையாக இடம்பெறாமல் இருக்கின்றன. – என்றார்.
அடுத்து, இம்ரான் மஹ்ரூப் எம்.பி. தெரிவிக்கையில் –
3 மதங்களுக்கு தனியான அமைச்சு இருந்து வந்தது. தற்போது பௌத்த சாசன அமைச்சின் கீழ் திணைக்களங்கள் ஊடாகவே ஏனைய மத நடவடிக்கைகள் வழிப்படுத்தப்பட்டு வருகின்றன. தொல்பொருள் திணைக்களம் அனைத்து இன மக்களையும் சமமாக மதிக்கின்ற வகையில் நெறிப்படுத்த வேண்டும். – என்றார்.
மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவிக்கையில்,
நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட் பிரதேசத்தில் நூறு வருடங்களாக செயற்பட்டு வந்த பள்ளிவாசல் அங்குள்ள ஏழை மக்களால் செயற்படுத்தப்பட்டு வந்திருந்தது. பள்ளிவாசல் அமைந்திருந்த காணியில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று அங்கு 3 குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுத்து, அதன் மூலம் பள்ளிவாசலுக்கு வருமானம் ஏற்படுத்திக்கொடுத்திருந்த நிலையில், பிரதேச செயலாளர் பள்ளிவாசல் அமைந்திருக்கும் காணி அரச காணி என தெரிவித்து வழக்கு தொடுத்தார். அதில் அவர் வெற்றி பெற்றதால் தற்போது அந்த மக்களுக்கு பள்ளிவாசல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இது தொடர்பாக தலையிட்டு பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதேநேரம் 90 வருடங்களுக்கும் அதிக காலமாக மஹர சிறைச்சாலையில் இருந்துவந்த பள்ளிவாசல் ஈஸ்டர் தாக்குதலுகுக்குப் பின்னர் மூடப்பட்டுள்ளது. அதனையும் மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்றார்.
இந்த விடயங்களுக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திணைக்களத்தில் அதிகாரிகளின் பற்றாக்குறை இருக்கிறது. அங்கு மோசடிகளில் ஈடுபட்டுவந்த அதிகாரிகளை நீக்குவதற்கு எடுத்த நடவடிக்கையாலே அந்தக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. என்றாலும், திணைக்களத்தின் நடவடிக்கைகளில் குறைபாடு ஏற்படாமல் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துவருகிறோம். ஏதாவது பிரச்சினை இருக்குமானால், அது தொடர்பில் எனக்கு அறிவித்தால் நான் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பேன்.
அத்துடன் பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களை பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்வதில் பிரச்சினை இல்லை. மதரசாக்கள் தொடர்பான ஆவணங்களுக்கு பாதுகாப்பு அமைச்சால் அனுமதி கிடைக்கப்பெற்றால் பதிவு செய்ய முடியும்.
அத்துடன் வருமானம் குறைந்த பள்ளிவாசல்கள் தொடர்பாக புதிய வேலைத்திட்டம் மேற்கொள்ள இருக்கிறோம். புத்தசாசனத்துக்கு மாத்திரமே நிதியம் இருக்கிறது. ஏனைய மதங்களுக்கு நிதியம் இல்லை. அது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். அதேபோன்று திருகோணமலையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.
மேலும், நோர்வூட் பள்ளிவாசல் தொடர்பாக முஸ்லிம் விவகார திணைக்களத்தினால் அறிக்கை கோரி இருக்கிறோம். அறிக்கை கிடைத்த பின்னர், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும்.
அத்துடன் தற்போது இந்த விடயம் சட்ட பிரச்சினைக்குள்ளாகி இருக்கிறது. அதனால் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி, முடியுமான நிவாரணங்களை வழங்க முயற்சிக்கிறேன். அதேநேரம் மஹர பள்ளிவாசல் தொடர்பாக சிறைச்சாலை திணைக்களத்துடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்போம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை