நல்லிணக்கத்துக்கான சுயாதீன ஆணைக்குழு நிறுவ அரசு முடிவு!

நிலைமாறுகால நீதி மற்றும் யுத்தத்திற்குப் பின்னரான நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாக, உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முன்மொழியப்பட்ட ஆணைக்குழு நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்படவுள்ளதோடு, சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்தாலோசித்து குறித்த சட்டமூலம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சட்ட மூலம் தொடர்பாகப் பொதுமக்களிடம் இருந்து கருத்துகளைப் பெறும் வேலைத்திட்டம் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.

யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கைப் பிரஜைகளின் முறைப்பாடுகள் தொடர்பாக உண்மையை உறுதி செய்யும் வகையில் நல்லிணக்கம், இழப்பீடுகள் மற்றும் நிலையான அமைதிக்குத் தேவையான வசதிகளை வழங்குவதே முன்மொழியப்பட்ட செயல்முறையின் முக்கிய நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் மக்கள் எதிர்கொண்ட மோதல் சூழ்நிலைகளில் இருந்து மீள்வதற்கு அவசியமான ஒரு முக்கிய அங்கமான உண்மையைத் தேடுவதற்கு ஒவ்வொரு இலங்கையருக்கும் உள்ள மறுக்க முடியாத உரிமையை அங்கீகரிக்கும் வகையில் இந்த உத்தேச ஆணைக்குழு செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை மக்களிடையே தேசிய ஒருமைப்பாடு, சமாதானம், சட்டத்தின் ஆட்சி, சகவாழ்வு, சமத்துவம், சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டவும் வலுப்படுத்தவும் இந்த ஆணைக்குழு செயற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பல்லின மற்றும் பலதரப்பட்ட சமூகங்களுக்கிடையில் நிலவும் பொருத்தப்பாடின்மை மற்றும் எதிர்காலத்தில் மீண்டும் முரண்பாடுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு உறுதியுடன் செயற்படுதல் முன்மொழியப்பட்ட ஆணைக்குழுவின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உட்பட இலங்கையின் யுத்தத்துக்குப் பிந்தைய நல்லிணக்க முயற்சிகளில் கடந்த பல ஆணைக்குழுக்கள் வழங்கிய பரிந்துரைகளை மீளாய்வு செய்யவும், பரிசீலிக்கவும் மற்றும் நடைமுறைப்படுத்தவும் இந்த ஆணைக்குழு செயற்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உத்தேச புதிய சட்டம் அமுலுக்கு வரும் வரை, உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் என்ற இடைக்கால நிறுவனத்தை ஸ்தாபிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.