நாட்டைப் பிளவுபடுத்த ஒரு போதும் இடமளியோம் ; தமிழ், முஸ்லிம் மக்கள் எம்முடன் இணையவேண்டும் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு
ஒரு தரப்பினரது குறுகிய நோக்கங்களுக்காக நாட்டை பிளவுப்படுத்த இடமளிக்க முடியாது. எமது கைகளில் இரத்தக் கறையில்லை. புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்க தமிழ், முஸ்லிம் மக்கள் எம்முடன் ஒன்றிணைய வேண்டும். அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல்களில் நாங்கள் வெற்றிப்பெறுவோம். எமது பயணத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும், பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பு சுஹததாஸ உள்ளக அரங்கில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது –
நாட்டு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை எமது பாரிய பலமாகும். எமது நம்பிக்கையை மக்கள் பாதுகாத்துள்ளார்கள். பாரிய சவால்களுக்கு மத்தியில் மக்கள் எம்முடன் உள்ளார்கள் என்பது பலவிடயங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டை சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் சேறு பூசும் விமர்சனங்கள், தவறான கருத்துக்கள் பதிவேற்றப்பட்டுள்ளதை அவதானித்துள்ளோம். போலியான குற்றச்சாட்டுகள்,சேறு பூசல்கள் ஒன்றும் எமக்கு புதிதல்ல, 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறான நிலைமைக்கு முகம் கொடுத்தோம்.
30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நான் நாட்டை அபிவிருத்தி செய்தேன்.யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் ஒருசில அரச தலைவர்கள் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.ஒருசிலர் பிரபாகரனுக்கு ஆயுதம் வழங்கி புலிகளின் போராட்டத்தை தூண்டி விட்டார்கள்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து தமிழ்,சி;ங்களம் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழும் சூழலை ஏற்படுத்தினேன்.பொருளாதாரத்தை மேம்படுத்தினேன். இவ்வாறான பின்னணியில் 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்தார்கள். நான் அதற்கும் இடமளித்தேன்.
2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் எமது பொருளாதார கொள்கைக்கு முரணாக செயற்பட்டது.தவறான தீர்மானங்கள்,காட்டிக் கொடுப்புகள் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தின. 2015 ஆம் ஆண்டு அரசாங்கமே வரையறையற்ற வகையில் வெளிநாட்டு கடன்களை பெற்று நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியது.
2019 ஆம் ஆண்டு பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். நல்லாட்சி அரசாங்கத்தினால் பலவீனப்படுத்தப்பட்ட நிதி நிலைமையை நாங்கள் பொறுப்பேற்றோம்.கொவிட் பெருந்தொற்று தாக்கம் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கினோம்.பொருளாதார பாதிப்பை ஒரு தரப்பினர் தமது அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்திக் கொண்டு அரகலய என்பதொன்றை தோற்றுவித்தார்கள்.
ஜனாதிபதியின் ஆடையை அணிந்துக் கொள்ள இன்று பலர் தயாராகவுள்ளார்கள்.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசாங்கத்தை பொறுப்பேற்காமல், தப்பிச் சென்றவர்களிடம் மக்கள் ஒருபோதும் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கப் போவதில்லை.
ஒருசிலர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இளைஞர்களைத் தவறான வழிநடத்துகிறார்கள். தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான ஆலோசனைகள் மற்றும் கட்டளைகளுக்கு அமைய அவர்கள் நாட்டுக்கு எதிராக செயற்படுகிறார்கள். ஒரு தரப்பினரது குறுகிய நோக்கங்களுக்காக நாட்டைப் பிளவுப்படுத்த இடமளிக்க முடியாது.
எமது கைகளில் இரத்தக் கறையில்லை. புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்க தமிழ்,முஸ்லிம் மக்கள் எம்முடன் ஒன்றிணைய வேண்டும்.அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல்களில் நாங்கள் வெற்றிப்பெறுவோம்.எமது பயணத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை