பிரதமர் தினேஷ் குணவர்தன பாக். உயர்ஸ்தானிகர் சந்திப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் தனது சேவைக் காலம் முடிந்து நாடு திரும்பும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் பாரூக் புர்க்கிக்கும் இடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதன் போது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறிப்பாக பௌத்த யாத்ரீகர்களின் பாகிஸ்தானுக்கான விஜயங்கள் குறித்து உயர்ஸ்தானிகர் பிரதமரிடம் விளக்கினார். இலங்கையர்களுக்கு பௌத்த யாத்திரை தலங்களைத் திறக்கும் பாகிஸ்தானின் முன்மொழிவுக்குப் பாராட்டுத் தெரிவித்த பிரதமர், கடந்த ஆண்டு பௌத்த பிக்குகள் ஊடகவியலாளர்கள் மற்றும் கல்விமான்கள் பாதுகாக்கப்பட்ட பௌத்த பாரம்பரியங்களைப் பார்வையிடுவதற்காக ஒரு சுற்றுப் பயணத்தை ஏற்பாடு செய்ததற்காக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்திற்கு நன்றி தெரிவித்தார். அவ்வாறானதொரு சுற்றுலா அடுத்த ஆண்டு முன் அரைப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிலும் ஏனைய சர்வதேச மன்றங்களிலும் இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளித்து வருகின்றமை மற்றும் உயர் கல்விக்காக இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்படும் பாகிஸ்தான் புலமைப்பரிசில்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளமைக்காக பாகிஸ்தான் தூதுவருக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு பாகிஸ்தான் தொழில் முயற்சியாளர்களிடம் பிரதமர் கேட்டுக் கொண்டதுடன் முதலீட்டாளர்களின் கவனத்திற்கு இதனைக் கொண்டு செல்வதாக உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார். மேலும் இலங்கையில் தான் பணியாற்றிய காலத்தில் தமக்கு வழங்கிய சிறந்த ஒத்துழைப்புக்காக பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.