யாழ்ப்பாணத்து வருகையை வரவேற்கும் வல்வை வளைவு
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி செல்லும் வீதியில் ‘யாழ்.வல்வை வளைவு’ வலிகாமத்தை வடமராட்சியில் இருந்து பிரித்து இரு இடங்களையும் எல்லைப்படுத்துகின்றது.
மேலும், வடமராட்சிக்கு வருவோரை யாழ்.வல்வை வளைவு வரவேற்று நிற்கின்றது.
ஏ9 வீதி வழியே யாழ்ப்பாணம் செல்லும் போது யாழ்.வளைவு நம்மை வரவேற்பதை இது நினைவுபடுத்துகின்றது என சுற்றுலாப் பயணிகள் பலர் குறிப்பிடுகின்றனர்.
நகரங்களுக்குள் நுழையும் போது வீதிகளில் உள்ள வரவேற்பு வளைவுகள் மக்கள் மனங்களில் ஆழமான மனப்பதிவுகளை ஏற்படுத்துகின்றன.
மக்களின் மனங்களிலும் மண் பற்றின் அடையாளமாக வளைவுகளின் நினைவுகள் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள வீதி வளைவுகளில் தமிழர் பண்பாட்டியல் மேலோங்கி இருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. வளைவுகளில் தமிழ் வாசகங்களைப் பதிவிடுவது மகிழ்வுக்குரிய செயற்பாடு என தமிழாசிரியர் ஒருவர் யாழ்ப்பாணத் தமிழ் பாரம்பரியம் பற்றி குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணிக்கையில் ஏபி20 வீதி வழியில் 20 ஆவது கிலோமீற்றர் கல்லை கடந்து செல்லும் போது வல்வை வளைவை எதிர்கொண்டு பயணிக்க நேரிடும்.
வீதியின் ஒரு பக்கத்தில் மட்டும் நிறுவப்பட்டுள்ள இந்த வளைவு தமிழியல்பை கொண்டு காட்சியளிக்கின்றது.
காட்சித் தோற்றத்தில் பிரமிப்பை ஏற்படுத்தி ஆனந்தத்தை பெருக்கி மகிழ்வை ஊற்றெடுக்க வைத்து விடுகின்றது.
சூரியன், பனைமரம், ஒளவையாரின் ‘வரப்புயர நீர் உயரும் ‘ என்ற வாசகமும் இருக்கின்றது. மேலும், வளைவின் நிறமும் கடல்சார் நீலநிறமாக இருக்கின்றது.
வரப்புயர நீர் உயரும் என்ற வாசகம் தமிழ் இலக்கிய வாசனையை ஏற்படுத்தி விடுகின்றது. அதியமான் என்ற பாண்டிய மன்னனை வாழ்த்திப் பாடுவதற்கு தமிழ் புலவர் ஒளவையாரால் ‘வரப்புயர நீர் உயரும்’ என்ற பாடல் பாடப்பட்டிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
வானுயர வளரும் பனையினையும் குறியீடாக கொண்டு வல்வை வளைவு அமைந்துள்ளது. வளைவைப் பார்க்கும் போது யாழ்ப்பாணத்தின் பனை வளத்தை அது நினைவுபடுத்துகின்றது.
வளைவின் தூணுடன் இணைக்கப்பட்ட சுவரின் முன்பக்கத்தில் ‘உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். வடமராட்சி மக்கள்’ எனவும் ‘நன்றி.மீண்டும் வருக.வடமராட்சி மக்கள்’ என பின் பக்கத்திலும் குறிக்கப்பட்டு இருப்பதையும் இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தமானதாகும்.
யாழ்.வல்வை வளைவையிட்டு கருத்திடும் மக்களிடையே அதனைப் பாராட்டிப் புகழுதலை அவதானிக்க முடிகின்றது.
யாழ்.வல்வை வளைவின் மீதான அவதானிப்புக்கள் பல செயற்பாட்டு விடயங்களில் நம்மை கவனமெடுக்கச் செய்து விடுகின்றது என யாழ் வடமராட்சியைச் சேர்ந்த கல்விப் புலமையாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
வரவேற்பு வளைவுகள் எப்போதும் மகிழ்ச்சிக்குரியவையாகவே இருக்கின்றன. வருவோரை வரவேற்கும் தமிழரின் உயர்ந்த பண்பாட்டை அவை வெளிப்படுத்தி நிற்கின்றன.
யாழ். வல்வை வளைவின் முன் பின் பக்கங்களில் எழுதப்பட்டுள்ள குறிப்பில் விடைபெறுவதற்கான வாசகங்களும் வரவேற்பு வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன.
இது மகிழ்ச்சியை ஏற்படுத்திய போதும் வளைவைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள நிலத்தினை அழகுபடுத்தியிருக்கலாம் என்பதும் சுட்டிக்காட்டக்கூடியதாகும்.
வளைவில் சிலையாக இருக்கும் பனை மரத்தினை கருத்திலெடுத்து யாழ்.வல்வை வரவேற்பு வளைவினைச் சூழ வீதியின் இரு பக்கங்களிலும் பனைமரங்களை நாட்டி பனைமரச் சோலையாக அந்த இடத்தினை மாற்றியிருக்கலாம் என்ற ஆதங்கமும் பயணிகள் சிலரால் வெளியிடப்பட்டதும் நோக்கத்தக்கது.(05)
இலங்கையின் சுதந்திர தினம்
சிங்களவர்களுக்கும் கரிநாளே
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இடித்துரைப்பு
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சிங்கள மக்களுக்கும் கரிநாள் என்பது பொருத்தமானதே எனத் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
இலங்கை தீவிலே தமிழ் மக்கள் தங்கள் இருப்புக்களைத் தக்க வைப்பதற்கு அன்றிலிருந்து இன்று வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
அதனடிப்படையில் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய பிரகடனத்தைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்.
குறிப்பாக இந்த இலங்கைத் தீவிலே தமிழ் மக்களுக்கான உரிமைகள், இருப்புக்கள் மீறப்பட்டு வருகின்றன. ஆட்சிகள் மாறுகின்றன. ஆட்சியாளர்களும் மாறிக்கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் தமிழ் மக்களுக்காக இன்றுவரை எந்த ஒரு தீர்வு திட்டமும் முன்வைக்கப்படவில்லை. இதய சுத்தியுடன் தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுதர சிங்கள தரப்புக்கள் தயாராக இல்லை.
வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூகங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், அனைத்து தொழிற்சங்கங்களும் சுதந்திர தினத்தைகட கரிநாளாகப் பிரகடனப்படுத்த ஆதரவை வழங்கவேண்டும்.
தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தை சிதைக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நாட்டிலே ஊடக சுதந்திரத்தை, ஒரு பொதுமகனின் கருத்து சுதந்திரத்தை கூட இந்த அரசாங்கம் பறித்தெடுத்து கொண்டுதான் இருக்கிறது. இதன் மூலம் போராட்டங்களில் ஈடுபடுகின்றவர்களை ஒடுக்க இவ்வாறான சட்டங்களை நடைமுறைபடுத்தி மல்லினபடுத்தி அவர்களை கைது செய்யும் நோக்கோடு இந்த அரசு செயற்பட்டு வருகின்றது.
இவர்கள் ஒருபோதும் தமிழர்களின் அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், வடக்கு கிழக்கில் அத்துமீறிய குடியேற்ற திட்டங்கள், திட்டமிட்ட பௌத்த மயமாக்கலையோ நிறுத்தப் போவதில்லை. எமக்கான தீர்வு கிடைக்கும்வரை நாம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டே ஆகவேண்டும் என்பது வரலாற்று உண்மை.
மேலும் கரிநாள் என்பது சிங்கள மக்களுக்கும் பொருத்தமானதே. காரணம், சிங்கள மக்களுக்கும் எதிரான சட்டங்கள் உருவாக்கப்பட்டே வருகின்றன. இதனை அனைத்துத் தரப்புக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
சமநேரத்தில் எங்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அதனடிப்படையில் 13 ஆவது திருத்தம் தமிழர்களுக்கான ஆரம்ப புள்ளியோ முடிவு புள்ளியோ கிடையாது. 13 ஐ நாம் ஒரு போதும் ஏற்றுகொள்ள முடியாது. ஆகவே தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காணாது நாங்கள் எங்களுடைய போராட்டங்களையோ போராட்ட வடிவங்களையோ கைவிடப்போவதில்லை என பல்கலைக்கழக மாணவர் சமூகமாக வலியுறுத்துகின்றோம்.
எங்களுடைய இனம் விடுதலை பெற வேண்டும். இனத்திற்குரிய நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனபடுத்த பூரண ஆதரவைத் தந்துவுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை