அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் பிரதேசங்கள் புறக்கணிப்பு! நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் காட்டம்
( வி.ரி.சகாதேவராஜா)
இம்முறை அரசு நிதி பகிர்ந்தளிப்பில் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. இதனை நான் வன்மையாக ஆட்சேபிக்கின்றேன் என்று அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் பின்னர் அவர் கருத்துரைக்கையில் –
காலாகாலமாக நாடாளுமன்றத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் கடந்த சில வருடங்களாக அந்த ஒதுக்கீடு வழங்கபடவில்லை. இந்த வருடம் வழமைக்கு மாறாக ஆளும் கட்சியின் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டிருக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தில் அது தமிழர் அல்லாத ஏனைய சமூக பிரதிநிதிகளுக்கு அது வழங்கப்பட்டிருக்கின்றது. இதனால் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களுக்கான நிதி உதவி மிக மிகக் குறைந்த அளவே இடம்பெற்றிருக்கின்றது. அதாவது தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.
அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் வீரசிங்கவிடம் நான் கேட்டிருக்கின்றேன் இதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று. ஆளுநரது நிதி உதவியையாவது முறையாக அங்கிருந்தே சகல பிரதேசங்களுக்கும் சமமாக பதிந்தளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.
கல்முனை, காரைதீவு, நாவிதன்வெளி, திருக்கோயில், ஆலையடிவேம்பு மற்றும் பொத்துவில், சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் இருக்கக்கூடிய தமிழ் பிரதேசங்கள் இந்த நிதி ஒதுக்கீட்டில் பாரிய பின்னடைவைச் சந்தித்து இருக்கின்றன.
இதற்கு அரசாங்கம் வகை கூற வேண்டும். இது திட்டமிட்டு அன்றிலிருந்து இன்று வரை இடம்பெற்று வருவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. எனவே, எதிர்காலத்தில் இந்தப் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டங்கள் நடத்துவதில் பாரிய சிக்கல் நோக்கப்படும் என்று நினைக்கின்றேன்.
உதாரணமாக காரைதீவுப் பிரதேசத்தில் 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்டு அதிலே 08 மில்லியன் முஸ்லிம் பிரதேசங்களான மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு கிராமங்களுக்கும் ஆக 2 மில்லியன் ரூபா காரைதீவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயம்? பன்னிரண்டு கிராம சேவை பிரிவுகளைக் கொண்ட காரைதீவுக்கு இரண்டு மில்லியன் ரூபாவும் ஆக 5 கிராம சேவை பிரிவுகளை கொண்ட மாவடிப்பள்ளி, மாளிகைக்காட்டிற்கு 8 மில்லியன் ரூபாவும் கொடுக்கப்பட்டிருக்கிறது .இது ஓர் உதாரணம்.
இதைவிட இன்னும் பல புறக்கணிப்புகளை என்னால் கூற முடியும்.
தமிழ் மக்கள் காலா காலமாக இதற்கு பழக்கப்பட்டவர்கள் தான். ஆனால் இன்னும் அதை தாங்க முடியாது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை நடத்த முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம். காலகாலமாக மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு பாரிய புறக்கணிப்புகளைச் செய்து வந்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக இந்த முறை வரலாற்றில் இல்லாத ஒரு நிதி பகிர்ந்தளிப்பை அம்பாறை மேற்கொண்டு இங்கே தமிழ் கிராமங்கள் புறக்கணிக்கப்படுவதற்கான வழி வகைகளைச் செய்திருக்கின்றது.
இதை நான் வன்மையாக ஆட்சேபிக்கின்றேன். – என்றார்.