இராணுவத்தினரின் நலனை மேம்படுத்த புதிய திட்டங்கள்
இராணுவத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரின் நலனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேயின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளை உள்ளடக்கிய பல நிகழ்ச்சிகள் இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றன.
அதன்போது, இராணுவ உறுப்பினர்கள், அவர்களின் நெருங்கிய உறவினர்கள், நலன்புரி அறக்கட்டளையில் உறுப்புரிமைப் பெற்றுள்ள ஓய்வுபெற்ற அதிகாரிகள், சிப்பாய்களின் திட்டமிடப்பட்ட தீவிர அறுவைச் சிகிச்சைகள் மற்றும் தீவிரமற்ற அறுவைச் சிகிச்சைகள் தொடர்பில் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக ‘கேஸ்லெஸ் மெடி கிளைம்’ எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்துடன் தொடர்புடைய சுவாசஹன காப்புறுதி நிதியத்தின் கீழ் வைத்தியசாலை கட்டணங்களை நேரடியாகச் செலுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுதல் மற்றும் பரிமாற்றமானது இராணுவ தளபதி, வைத்தியசாலை பிரதிநிதிகளின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்படி, இத்திட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 33 தனியார் வைத்தியசாலை வலையமைப்புகளின் ஊடாக, புதன்;கிழமை முதல் இராணுவ உறுப்பினர்கள் மற்றும் நலன்புரி நிதியத்தில் அங்கம் வகிக்கும் ஓய்வுபெற்ற போர்வீரர்களும் இந்த வசதிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாகக் காணப்படுகிறது.
மேலும், ஆசிரி வைத்தியசாலை ஹோல்டிங்ஸ் பிஎல்சி, தேவைப்படும் வீரர்களின் குழந்தைகளுக்காக மாதாந்தம் இரண்டு இருதய அறுவை சிகிச்சைகளுக்கு நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்தது.
மேலும், 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் சிறந்து விளங்கிய, படையினரின் 635 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணப் பொதிகள் வழங்கப்பட்டன.
அத்தோடு, போர்வீரர்களின் மகன்கள் மற்றும் மகள்களின் கல்வியை இலகுபடுத்தும் வகையில் பெறுமதியான ‘கற்றல் நண்பன்’ எனும் 300 இணைய விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டன.