ஒரு மாதத்தில் நாடாளுமன்றத்துக்கு புதிய கடற்றொழில் வரைவு வருமாம்! உலக உணவு மற்றும் விவசாய அமைப்பிடம் டக்ளஸ் உறுதி
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஐ.நா. உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதி பணிப்பாளர் நாயகம் மனுவேல் பராங்கே தலைமையிலான பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று கடற்றொழில் அமைச்சில் இன்று (வியாழக்கிழமை)இடம்பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் –
இலங்கை கடற்றொழில் சமூகத்தை சர்வதேச மட்டத்தில் உயர்த்துவதற்காக உணவு மற்றும் விவசாய அமைப்பின்
உதவியுடன் உருவாக்கப்பட்டு வரும் தற்போது வரைவு மட்டத்திலுள்ள புதிய கடற்றொழில் சட்டத்தை ஒரு மாதத்திற்குள் கடற்றொழிலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் கருத்துக்களை உள்வாங்கி அமைச்சரவையின் அனுமதியுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென தெரிவித்தார்.
இந்தச் சட்டத்தை தயாரிப்பதற்கு உணவு மற்றும் விவசாய அமைப்பு தரப்பில் வழங்கப்பட்ட உதவிகளுக்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
இலங்கை கடற்றொழில்துறையை அபிவிருத்தி செய்வதற்கும் எமது அறுவடைக்குப் பின்னரான பதிப்புகளைத் தடுப்பதற்கும் எமது நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் உணவு மற்றும் விவசாய அமைப்பின் உதவி மற்றும் ஆலோசனை தேவைப்படுவதாகவும்
சுட்டிக்காட்டிய அமைச்சர் குறிப்பாக எதிர்காலத்தில் மீன்வளம் அழிவடையும் அபாயம் இருப்பதால் கூடுகளில் மீன்களை வளர்ப்பதற்கான உதவிகளை செய்து தருமாறும் இது
உலகெங்கும் நடைமுறையில் உள்ள விடயம் என்பதால் மோதா போன்ற மீன் இனங்களை வளர்ப்பதற்கு உதவி புரியுமாறும் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதிகளிடம் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் நடவடிக்கைகள் காரணமாக இலங்கை மீனவர்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படுகின்றன எனவும் தெரிவித்த அமைச்சர் தற்போது எமது நாடு
எதிர்நோக்கியுள்ள பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து மீட்சிபெறும் வரை கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இதன் போது உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதி பணிப்பாளர் நாயகம் மனுவேல் பராங்கே கருத்து தெரிவிக்கையில் –
அமைச்சரால் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிககைள் தொடர்பாக தமது அமைப்பு சாதகமாக பரிசீலிக்குமெனவும் இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது தெடர்பில் தமது அமைப்பு சாதகமாக பரிசீலனை செய்யுமெனவும் புதிய
கடற்றொழில் வரைவை உருவாக்குவதற்கு கடற்றொழில் அமைச்சர் , அமைச்சு மற்றும் திணைக்கள அதிகாரிகள் வழங்கிய அர்ப்பணிப்பை தாம் பெரிதும் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் நயனா குமாரி சோமரத்ன உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கை வதிவிடப் பிரதிநிதிகள், கடற்றொழில் அமைச்சின் உயரதிகாரிகள்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.