2025 ஆம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றும் உயர்தர கலை வர்த்தகப் பிரிவு மாணவிகளுக்கு வரவேற்பு!
(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யின் 2025 ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றும் உயர்தர கலை, வர்த்தகப் பிரிவு
மாணவிகளை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வு 2024 உயர்தர சிரேஷ்ட மாணவிகளின் ஏற்பாட்டில் கல்லூரியின் சேர் ராசிக் பரீட் மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் இந்தப் பிராந்தியத்தின் கல்வித்துறையில் சாதித்துக் காட்டிய இரண்டு பெண் சாதனையாளர்கள் வளவாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர் மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கல்வி கற்றுக் கல்லூரியிலே ஆசிரியையாகப் பணிபுரிந்து கல்லூரியில் இருந்தவாறே கல்வி நிர்வாக சேவை பரீட்சையில் சித்தி பெற்று கல்வி நிர்வாக சேவைக்குத் தெரிவு செய்யப்பட்ட சாய்ந்தமருதின் முதலாவது பெண் கல்வி நிர்வாக சேவை அதிகாரியும் சில காலம் உதவிக் கல்வி பணிப்பாளராகவும் சில காலம் கல்முனைக் கோட்டக் கல்வி அதிகாரியாகவும் பணிபுரிந்து தற்போது இந்தப் பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்று, பாடசாலையின் ஒவ்வொரு துறையும் முறையாக வடிவமைத்து செப்பனிட்டுக் கொண்டிருக்கும் கல்லூரியின் அதிபர் ஏ.பி. பாத்திமா நஸ்மியா சனூஸ் அவர்களும் மற்றுமொரு வளவாளராக இப்பிராந்தியத்தில் பிரபலமான பெண் ஆய்வாளர், எழுத்தாளர், பன்னூல் ஆசிரியர், உளவளத்துறை எழுத்தாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கை பீடத்தின் சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.வை. மின்னதுல் ஹிரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
உயர்தர கலை வர்த்தகப் பிரிவில் இணைத்துக்கொள்ளப்பட்ட சுமார் நூற்றியெண்பது (180) மாணவிகளுக்கு ஆலோசனை வழிகாட்டல் பயிற்சிகள் வழங்கப்பட்டமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும்.
மாணவிகள் எதிர்நோக்குகின்ற கல்வித்துறை சார்ந்த பிரச்சினைகள், பருவ கால பிரச்சனைகள், எதிர்காலத்தை திட்டமிடுதல், இலக்குகளை வடிவமைத்தல், இலக்குகளை நோக்கி நகர்தல், அதில் உள்ள சவால்கள் வெற்றி கொள்ளல் மாணவிகளுக்கு முன்னுள்ள சவால்கள் அவற்றை எதிர்கொள்ளும் நுட்ப முறை என மாணவிகளுக்கு முழுமையாக பயன்படக்கூடிய வகையில் செயல்முறை பயிற்சி மூலமும் விரிவுரையின் மூலமும் அம் மாணவர்களுக்கு பல தெளிவூட்டல்களை வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்த கலை, வர்த்தகப் பிரிவு ஒன்றிணைக்கப்பட்டு அதன் புதிய பகுதி தலைவியாக சிரேஷ்ட ஆசிரியை மௌலவியா ஐ.எல்.எம்.ஏச்.எஸ். ஹிதாயா அவர்கள் அதிபர் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான எஸ்.எஸ்.எம். சமதா மசூது லெவ்வை, ஏ.எச் நதிரா, உதவி அதிபர்களான எம்.எஸ் மனூனா,
என்.டி நதீகா, பகுதித்தலைவர்கள், உயர்தர பிரிவு ஆசிரியர்கள், மாணவிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.