பல பட்டதாரிகளை உருவாக்கிய பெருமைக்குரிய பழீல் ஆசிரியரின் இழப்பு பெரும் கவலையளிக்கிறது இரங்கல் செய்தியில் ஹரீஸ் எம்.பி.
நூருல் ஹூதா உமர்
அரசறிவியல் முதுநிலை பட்டதாரியும், சிரேஷ்ட ஆசிரியருமான ஏ.சி.எம் பழீல் காலமான செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தவனாக இருக்கிறேன். எனது உறவுமுறை காரராகவும் இருக்கும் லொஜிக் பழீல் என்று அழைக்கப்படும் பழில் ஆசிரியர் எல்லோராலும் அன்புடன் நேசிக்கப்பட்ட ஒருவர்.
குறிப்பாக கல்முனை பிராந்தியத்தில் பல பட்டதாரிகளை உருவாக்கிய பெருமை அவரையே சாரும். சாய்ந்தமருது கமுஃஅல்- கமரூன் வித்தியாலயத்தில் முதன் முதலாக இப்பிராந்தியத்தில் ஜி.ஏ.கியு. எனப்படும் வெளிவாரி பட்டப்படிப்பினை ஆரம்பித்தவர் அவராவார். இன்று ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் இப் பிராந்தியத்தில் உருவாகியுள்ளார் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது அனுதாப செய்தியில் –
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாணவர் காங்கிரஸ் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக இருந்து மாணவர் காங்கிரஸ் தலைவராக என்னோடு சேர்ந்து கட்சியை பலப்படுத்துவதில் முன்னின்று உழைத்தவர். பெருந்தலைவர் மர்ஹூம் தஎம்.எச்.எம். அஸ்ரபோடு இணைந்து கட்சியை நேசித்தவர். தலைவரோடு இணைந்து கட்சிக்காக பாடுபட்டவர். எனது நாடாளுமன்ற அத்தனை தேர்தல்களிலும் எனக்கு பக்கபலமாக நின்று எனது தேர்தல் வெற்றிக்கு பங்களிப்பு செய்தவர், முஸ்லிம் சமுதாய விடயங்களில் பல புத்தகங்களை எழுதி அதனூடாக முஸ்லிம் சமுதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியவர்.
அன்னாரின் மறைவால் துயரும் அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதல்களை தெரிவித்து கொள்வதுடன் எல்லாம் வல்ல அல்லாஹூத் தஆலா அவரின் நல்லமல்களை பொருந்திக் கொண்டு உயரிய ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவன பாக்கியத்தை வழங்க பிரார்த்திக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.(05)