விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் குடும்பத்திடம் ஒப்படைப்பு
பாறுக் ஷிஹான்
பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும் சிற்றூர்தி(வான்) மோதி உயிரிழந்த சிறுவனின் சடலம் குடும்பத்தினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் வீட்டின் கதவு தற்செயலாக திறந்த நிலையில் வீதியை நோக்கி ஓடிய வேளை அவ்வழியால் வந்த பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும் வான் மோதியதில் வியாழக்கிழமை படுகாயமடைந்த சிறுவன் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்து சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பெரிய நீலாவணை விஷ்ணு வித்தியாலய வீதியை சேர்ந்த 4 வயது மதிக்கத்தக்க அருணா ஹர்ஷான் என்பதுடன் விபத்தின் போது சிறுவனின் சகோதரியை ஏற்ற வந்த சிற்றூர்தி சிறுவனை மோதி ஒரு பக்க நெஞ்சு பகுதியில் ஏறி சென்றுள்ளதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கல்முனை ஆதார வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.