செயற்றிறன் மதிப்பீட்டில் தேசிய மட்டம் தெரிவானது கல்முனை மாநகர சபை!
(அஸ்லம் எஸ். மௌலானா)
2023 ஆம் ஆண்டிற்கான கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களிடையான செயற்றிறன் மதிப்பீட்டுப் போட்டியில் கல்முனை மாநகர சபை கூடிய புள்ளிகள் பெற்று தேசிய மட்ட மதிப்பீட்டிற்கு தகுதி பெற்றுள்ளது.
பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளரால் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தெரிவுப் பட்டியலில் இத்தகவல் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களம் என்பனவற்றின் கண்காணிப்பில் சுயாதீனமான நடுவர்கள் மூலம் மாகாண மட்டத்திலான மதிப்பீடு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை மாநகர சபை கடந்த வருட ஆரம்பம் முதல் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் தொடர்ந்தேச்சியாக செயற்படுத்தி வந்த நிர்வாக சீர்படுத்தல்கள், சீரான ஆளணி முகாமைத்துவம், திட்டமிட்ட அடிப்படையிலான உட்கட்டமைப்பு விருத்திகள், நவீனமயப்படுத்தப்பட்ட முகப்பு அலுவலக வசதிகள் என்பவற்றோடு மாநகர சபையின் உத்தியோகத்தர் மற்றும் ஊழியர் குழாத்தின் அயராத முயற்சிகளின் பயனாக செயற்றிறன் மதிப்பீட்டில் பாரிய வளர்ச்சி வீதத்தை வெளிப்படுத்தியிருந்தமையின் அடிப்படையிலேயே இம்மதிப்பீட்டில் கல்முனை மாநகர சபை முன்னிலைக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது.