இந்திய ரோலர் வலையினால் மீனை அழிக்கின்றார்கள் போதைப் பொருளால் இளைஞர்களை அழிக்கிறார்கள்! கிண்ணியா மீனவ சங்கங்களின் சமாஜத் தலைவர் காட்டம்
(கிண்ணியா நிருபர்)
இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பிக்குள் நுழைந்து தடை செய்யப்பட்ட ரோலர் வலைகளைப் பயன்படுத்தி மீன் வளத்தை அழிக்கின்றார்கள் என கிண்ணியா மீனவ சங்கங்களின் சமாஜத் தலைவர் ரீஜால் பாய்ஸ் ஊடக சந்திப்பின் போதும் தெரிவித்தார்
மேலும் அவர் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு அத்துமீறி மீன்பிடிப்பதனால் இலங்கை மீனவர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு கிளிநொச்சி முதல் கிழக்கு மாகாணத்தில் திருவோணமலை மட்டக்களப்பு அம்பாறை முதலான பிரதேசங்களில் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தியா ராமேஸ்வரத்திலிருந்து இலங்கை கடற்பரப்புக்குள் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அத்துமீறி பிடிக்கின்றார்கள்.
எமது கடலில் உள்ள அனைத்து வளங்களையும் இழுப்பு மடி வலையைப் பயன்படுத்தியும் ரோலறைப் பயன்படுத்தியும் பெறுமதி வாய்ந்த வளங்களை சுரண்டி செல்கின்றார்கள்.
குறுகிய காலத்துக்குள் இதனை அவர்கள் அபகரித்து செல்கின்றார்கள் அழிக்கின்றார்கள், இதனால் எமது மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் வந்து தொழில் செய்வதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். அவ்வாறு வருவார்கள் ஆனால் அவர்களுக்கான தண்ட பணத்தை அரசாங்கம் அதிகமாக விதிக்க வேண்டும்.
இலங்கை அரசாங்கம் எங்களுக்கு சலுகை தரும் என்று எண்ணி அத்துமீறல்களைக் கண்டும் காணாததும் போல இருக்கின்றார்கள். இந்திய மீனவர்கள் மீண்டும் மீண்டும் வந்து மீன்பிடிக்கின்றார்கள். இது எமது அனைத்து வளங்களையும் களவாடி செல்வதாக அமைகிறது.
இன்று தொழிலில்லாமல் பலர் வெளிநாடுகளுக்கு செல்கின்றார்கள் அங்கும் தொழில் இல்லாமல் கஷ்டப்படுகின்றார்கள்.
கடல் ரீதியான அனைத்து அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்காததால் தான் எமது வளங்கள் அழிக்கப்படுகின்றன.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அனைத்து அதிகாரிகளும் கடலோர திணைகள அதிகாரிகள் அனைவரும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியா மீனவர்கள் எல்லை மீறி யாழ்ப்பாணத்தில் மீன்பிடிப்பதால் அவர்களுக்கு எதிராக மக்கள் எடுக்காத நடவடிக்கை இல்லை எடுக்காத போராட்டம் இல்லை.
இன்று யாழ்ப்பாணத்தில் மீன் பிடிக்கின்றார்கள் நாளை கிழக்கு மாகாணத்தில் மீன்பிடிப்பார்கள். யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற அதே பிரச்சினை எமது கிழக்கு மாகாணத்தில் நடக்கும்.
மீன்பிடிக்க வருகின்றவர்கள் போதை பொருளைகடத்தி வருகின்றார்கள் வலையால் மீனை அழிக்கின்றார்கள். போதைப் பொருளால் இளைஞர்களை அழிக்கின்றார்கள்.
கல்வியையும் பொருளாதாரத்தையும் அழிக்கின்றார்கள்
போதைப் பொருளை பயன்படுத்தி எமது நாட்டை அழிக்கின்றார்கள் ரோலரை பயன்படுத்தி மீனை அழிக்கின்றார்கள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை ஜனநாயக நாடு. தனித்துவம் பெற்ற நாடு,ஏன் இந்த நாட்டில் உள்ள தலைவர்கள் இந்தியாவுக்கு பயப்படுகிறார்கள்.
இந்திய அரசாங்கம் பலம் வாய்ந்த நாடாக இருப்பதால்
உதவிகள் செய்வார்கள் என்று நம்பி அனைத்து குற்ற செயல்களையும் கண்டும் காணாதமை போல் இருக்கின்றார்கள்.
இந்த நினைப்பு இனி இருக்கக் கூடாது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்து பொருள்களுக்கும் நாங்கள் வரி கட்டுகின்றோம்.
ஆகவே, எமது நாட்டில் உள்ள வளங்களை அடுத்த நாடு கொண்டு செல்வதற்கு நாங்கள் உடந்தையாக இருக்கக் கூடாது இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்