இளைஞர்களை போஸ்டர் ஒட்ட அழைப்பவர் மத்தியில் தலைவனாக உருவாக்க அழைத்தவர் எஸ்.எம்.சபீஸ்! இணைப்பாளர் ஜே.எம்.ஹசான் பெருமிதம்
நூருல் ஹூதா உமர்
இளைஞர்களைத் தமது தேவைகளுக்காக பயன்படுத்தும் அரசியல் கலாசாரம் எமது நாட்டில் வேரூன்றிக் காணப்படும் சகாப்தத்தில் எங்களைத் தலைவன் ஆக்குகிறேன் வாருங்கள் என்று அழைத்தவர் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களின் முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம். சபீஸ் அவர்கள் மாத்திரமே என அண்மையில் இடம்பெற்ற இளைஞர்கள் ஒன்று கூடலின் போது அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜே. எம். ஹஸான் தெரிவித்தார்
மேலும் அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில் –
இளைஞர்களின் முதல் அத்தியாவசிய கடமை கல்வி பயில்வதாகும். ஒவ்வொரு மாணவனும் அரசாங்கம் அல்லது தனியார் துறைகளில் தமது பட்டப்படிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு சிலர் அரச பல்கலைக்கழகத்துக்கு போனால் தான் கற்றவர்கள் என்ற மாயையை ஏற்படுத்தி நமது சமூகத்தை கல்வி கற்க விடாமல் தடுத்த காலங்கள் மலையேறிப் போகி விட்டன.இன்னொருவருக்கு அநியாயம் செய்யாமல் தமது வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தைத் தேடிக்கொள்ளும் அறிவைப் பெற்றுக்கொள்ளுதல் கல்வியின் முதல் நோக்கமாகும் அதற்காக நீங்கள் பட்டப்படிப்பை மேற்கொள்ள வேண்டும்.
அத்தோடு மூன்று, நான்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து புதிய தொழில் முயற்சியில் ஈடுபட்டு பலருக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பவர்களாக நாங்கள் மாறவேண்டும் என்று உண்மையாக சிந்திக்கும் ஒருதலைவன் எங்களுக்கு கிடைத்துள்ளார். இவ்வளவு காலமும் எங்களை போஸ்டர் ஒட்டவும் கட்சிப் பணிகளை மேற்கொள்ளவுமே பயன்படுத்தினர். முதன் முறையாக எங்களை எங்களுக்காக திறமையானவர்களாக மாற்றிட முயற்சிக்கின்றார் எஸ்.எம். சபீஸ் அவர்கள். அதனால் தான் அதிகமான இளைஞர்கள் கிழக்கின் கேடயத்தின் பின்னால் அணி சேருகின்றனர்.
மேலும் ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும் நாங்கள் அன்பான வேண்டுகோள் விடுக்கின்றோம். நாம் அடிமைகளாக சிந்திக்க முடியாதவர்களாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு நம்பியவர்களாக இருந்தது போதும் புதிய புரட்சி செய்வோம் புறப்பட்டு வாருங்கள். எஸ் எம் சபீஸ் எனும் கேடயத்தோடு அணி சேர்ந்து புது யுகம் படைப்போம் என்று தெரிவித்தார்.