பொலிஸாருக்கு விசேட பணப்பரிசு திட்டம் – பொலிஸார் அறிவிப்பு!

 

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் பொலிசாருக்கு விசேட பணப்பரிசில்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்தும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 5,000 ரூபாய் வழங்கப்படும் என போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார்.

அத்துடன் மது போதையில் வாகனம் செலுத்தும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு விசேட சான்றிதழும் வழங்கப்படும்.

இதேவேளை, புத்தாண்டு காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டறிவதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் 150,000 இரத்த பரிசோதனை கருவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

604 பொலிஸ் நிலையங்களுக்கு தற்சமயம் இரத்த பரிசோதனை கருவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

அதேபோன்று மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை அடையாளம் காண்பதற்கான சிறுநீர் பரிசோதனை உள்ளிட்ட விசேட பயிற்சிகள் பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நடவடிக்கைகளுக்காக 1,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.