மே 18 வாரத்தை புதிய பரிணாமத்தில் முன்னெடுக்க தீர்மானம்
இந்த வருடத்தில் இருந்து மே 18 இனப்படுகொலை வாரத்தை புதிய பரிணாமத்தில் முன்னெடுக்க வேண்டும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15 ஆவது ஆண்டை பரவலாக மக்கள் மயப்படுத்த வேண்டும் என யாழில் சிவில் அமைப்புக்கள் கூடி ஆராய்ந்துள்ளன.
யாழ்ப்பாணம் புனித தெரேசா தேவாலய முன்றலில் நேற்று இடம்பெற்ற சிவில் சமூக அமைப்புகளின் கலந்துரையாடலிலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பிலும் மேற்படி விடயங்கள் பகிரப்பட்டன.
முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தவையும் இன்று காசாவில் நிகழ்ந்து கொண்டிருப்பவையும் இனிமேலும் எந்த மக்களுக்கும் நிகழக் கூடாது. முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தலை மீள நிகழாமை நோக்கிய பயணத்தின் தொடக்கமாக மக்கள் அனைவரும் சிந்திக்கும் தளமாக உருவமைப்பு செய்வதற்கு மக்கள் சார்ந்து சிந்திக்கும் செயற்படும் பல சிவில் சமூக அமைப்புகள் தீர்மானித்துள்ளன.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தலை பல்வேறு புதிய வழிமுறைகள் ஊடாகவும் மக்கள் மயப்படுத்தி மேற்கொள்வதற்கான முன்மொழிவுகள் கலந்துரையாடப்பட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நினைவேந்தல் செயற்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்து கொண்ட மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் விளக்கமளித்தனர்.