விண்ணப்பிக்காத பாடத்திற்கான அனுமதி அட்டை – சிரமத்திற்குள்ளான மாணவர்கள்
க. பொ. த சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாம் முறை விண்ணப்பித்த 10,000க்கும் அதிகமானோர், அதாவது தனியார் விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்காத பாடத்திற்கான அனுமதி அட்டையை பெற்றதால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
தொழிநுட்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
2023 க. பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 06 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த ஆண்டு பரீட்சைக்கு 452,979 பேர் விண்ணப்பித்துள்ளனர், அதில் 65,331 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள்.
அததெரண BIG FOCUS நிகழ்ச்சியில், இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடம் வினவியபோது, எழுந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் உரிய பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றாமல் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களில் கிட்டத்தட்ட 35% பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) ஆகிய இரு விடுமுறை நாட்களிலும் நுளம்புகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளை சுத்தம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாடசாலை அதிகாரிகளுக்கும் பெற்றோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.