போலி வைத்தியர்கள் தொடர்பில் பொலிசாரின் அதிரடி நடவடிக்கை
போலி உரிமம் மற்றும் சான்றிதழ்களை காட்டி மருத்துவ நிலையங்களை நடத்தும் தகுதியற்ற வைத்தியர்களை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனுக்கும் இடையிலான கலந்துரையாடல் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது.
இதில் குறித்த சங்கத்தின் தலைவர் கலாநிதி தர்ஷன சிறிசேன உள்ளிட்ட உறுப்பினர்கள் குழுவும் பொலிஸாரை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவும் இணைந்துகொண்டனர்.இதன்போது வைத்திய துறையில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து பொலிஸார் கவனம் செலுத்தியிருந்தனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இலச்சினை ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டிக் கொண்டு அதனை முறைகேடாக பாவித்து சில சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும், போலி சான்றிதழ்கள் வைத்துக் கொண்டு வைத்தியர்கள் போல் நடிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.