ஈரானிய ஜனாதிபதியின் உரைக்கு எதிர்ப்பு வெளியிட்ட முஸ்லிம் பெண்கள் அமைப்பு
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஈரானிய ஜனாதிபதி செயிட் இப்ராஹிம் ரைசி கொழும்பிலுள்ள முன்னணி பள்ளிவாசலில் உரையாற்றியபோது வெளியிட்டதாக கூறப்படும் வெறுக்கத்தக்க வார்த்தைப் பிரயோகம் குறித்து மனித உரிமைகள் ஆர்வலரான பெண் ஒருவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இலங்கை-அமெரிக்க முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை மற்றும் சிவில் உரிமைகள் அமைப்பின் தலைவரான சோரயா டீன், இந்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
1980களில் ஈரானில் ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகள் தூக்கிலிடப்பட்டது உட்பட மனித உரிமை மீறல்களே ஜனாதிபதி ரைசியின் வரலாறாகும். இந்தநிலையில் இலங்கையில் உள்ள பள்ளிவாசலில் அவரை பேச அனுமதித்திருக்கக்கூடாது.முன்னதாக பாகிஸ்தானில் அவரது பயணத்தின்போது எந்தவொரு பொதுக் கூட்டங்களிலும் பேசுவதற்கான அவரது கோரிக்கை மறுக்கப்பட்டதாக சோரயா டீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ரைசி போன்ற வெளிநாட்டுத் தலைவர்களின் செல்வாக்கு தீவிரவாதம், வெறுப்பு பேச்சு என்பன முஸ்லீம் இளைஞர்களை தீவிரமாக்கும் ஒரு ஆபத்தான போக்காகும்.
இந்தநிலையில் இது உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்.வன்முறை மற்றும் பிற நாடுகளுக்கு விரோதமான செய்திகளைக் கொண்டு இளைஞர்களை மூளைச்சலவை செய்வது சமூகங்களை பிளவுபடுத்துவதற்கும் விதைகளை விதைப்பதற்கும் மட்டுமே உதவுகிறது என்று சோரயா குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து இலங்கையர்களும், அவர்களின் நம்பிக்கை அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல், வெறுப்பு பேச்சு மற்றும் தீவிரவாத சித்தாந்தங்களுக்கு எதிராக ஒன்றிணைவது அவசியமாகும்.
அத்துடன் மிகவும் அமைதியான மற்றும் இணக்கமான சமூகத்தை வளர்ப்பதற்காக சகிப்புத்தன்மை, மரியாதை மற்றும் உரையாடலை வளர்ப்பதற்கு அனைவரும், ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை புனித பள்ளிவாசலின் எல்லைக்குள் இருந்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை நோக்கி ஜனாதிபதி ரைசியின் வெறுப்புப் பேச்சுக்கு, இலங்கை அதிகாரிகள் மௌனமாக இருப்பது கவலையளிக்கிறது என்றும் டீன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இலங்கை தேசத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் மற்றும் நட்பு நாடுகளுக்கிடையிலான உறவுகளை சீர்குலைக்கும் எந்தவொரு சொல்லாடல்கள் அல்லது நடவடிக்கைகளுக்கு எதிராக தலைவர்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
அத்துடன் தீவிரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் நிராகரித்து, ஊக்குவிப்பதில் தங்கள் அர்ப்பணிப்பில் ஒற்றுமையாக நிற்குமாறு அனைத்து இலங்கையர்களையும் தாம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்