முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி – தடை உத்தரவை நீக்கிய நீதிமன்றம்
(கஜனா)
முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்குவதற்கு நீதிமன்றங்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு நினைவு கஞ்சி வழங்கும் செயற்பாடு வடகிழக்கில் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதற்கு போலீஸ் தரப்பினரால் தடை உத்தரவும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கல்முனை பிரதேசத்தில் தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்த காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் சமூக செயற்பாட்டாளர் துஷாந்தன் உள்ளிட்ட குழுவினருக்கு தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
இந்த தடை உத்தரவு நீக்கம் தொடர்பாக நகர்வு மூலம் விண்ணப்பம் ஒன்று இன்றையதினம் கல்முனை நீதிமன்றத்திற்கு கொடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் பிரதிவாதிகளுக்கு கல்முனை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குட்பட்ட திரௌபதி அம்மன் ஆலய வளாகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு குறித்த நிகழ்வை நடாத்த முடியும் எனவும்,
தடை செய்யப்பட்ட சின்னங்கள் மற்றும் அமைப்புக்களின் சார்பாகவும் நிகழ்வுகள் நிகழ்த்த முடியாது எனவும்,
அது தவிர பொதுமக்களை நினைவு கூறுதல் நினைவுக்கஞ்சி வழங்குதல் போன்ற மத செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் எனவும் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடலாம் எனவும் மேலும் இது தொடர்பாக போலீசாருக்கு தடை உத்தரவு கொடுப்பதற்கு அனுமதியில்லை எனவும் கல்முனை நீதவான் எம் எஸ் எம் சம்சுதீன் தெரிவித்திருந்தார்.
இதன்போது சட்டத்தரணிகளான சிவரஞ்சித், மதிவதனன் மற்றும் ரிஃபாஸ் ஆகியோரின் நியாயமான வாதத்தின் அடிப்படையில் இந்த தடை உத்தரவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி தொடர்பான தடை உத்தரவில் ஆஜராகி இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனுக்கும் தடை உத்தரவு நீக்கம் செய்யப்பட்டு பொதுமக்கள் சார்ந்த எந்த ஒரு நினைவேந்தல் நிகழ்வினையும் நிகழ்த்த முடியும் எனவும் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் சின்னங்களை பயன்படுத்தி எந்தவொரு நிகழ்வையும் நிகழ்த்த முடியாது எனவும் நினைவு கஞ்சி வழங்குவது தொடர்பாக போலீசாருக்கு தடை உத்தரவு வழங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கருணாகரன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.