சம்மர் சூடுக்கு சருமத்துக்கு இதமளிக்கும் ஆரஞ்சு டோனர் வீட்லயே தயாரிக்கலாம்!
எல்லோரும் கொரோனாவுக்கு பயந்து வீட்டில் முடங்கி இருக்கிறோம். கிடைக்கும் இந்த நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வது நல்லது. குறிப்பாக அழகு குறித்த பராமரிப்பிலும். ஏனெனில் அழகு ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட ஒன்றுதான். செயற்கை அழகை காட்டிலும் இயற்கை அழகை விரும்புபவர்களுக்கு இது சரியான தருணம் என்றே சொல்லலாம். இயற்கை முறையில் அழகு தரும் பொருள்களை தயாரிக்க சரியான நேரம் இது. எளிதாக தயாரிக்ககூடிய இந்த பொருள்கள் உங்கள் அழகுக்கு கூடுதல் அழகு சேர்க்கும். அதிலும் வீணாக தூக்கியெறியும் ஆரஞ்சு தோலை கொண்டு முகத்துக்கு டோனர் தயாரிக்கும் முறையை இப்போது பார்க்கலாம்.
டோனர்
சருமத்துக்கு பாதுகாப்பு கவசம் தான் டோனர் என்று சொல்லலாம். இதை முகத்துக்கு பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை அளவும். நீர்ச்சத்தும் பாதுகாக்கப்படும். இதனால் சருமத்தில் வறட்சி உண்டாகாது. பொலிவாக இருக்கும்.
முகத்தில் இயற்கையாகவே நீர்ச்சத்து இருக்கும். முகத்துக்கு பராமரிப்பு செய்யும் போதும், க்ளென்சிங் செய்யும் போதும் இந்த ஈரப்பதம் குறையும். . இதை தக்க வைக்கவே டோனர் செய்கிறோம்.
சருமத்தை சுத்தம் செய்யும் போது சருமத்துவாரங்கள் திறந்திருக்கும். இதை இறுக செய்வதற்கு டோனர் செய்ய வேண்டும். இல்லையெனில் சருமதுவாரங்களில் அழுக்குகள் அடைந்து பருக்களை அதிகரிக்கும்.
எதற்கு டோனர்
டோனரில் 3 வகையான டோனர் பயன்படுத்துகிறோம். ஒன்று ஆல்கஹால் கலந்திருக்கும். இன்னொன்று க்ளிசரின் கலந்திருக்கும். மற்றொன்று தண்ணீருடன் இயற்கையான பொருளை கலந்து செய்யப்படும் டோனர்கள். இது மூலிகை பொருள்களை கொண்டும் செய்யப்படும். பழங்களில் தோல்களிலிருந்தும் செய்வதுண்டு. இதை தயாரிப்பது மிக எளிது என்பதால் இயன்றவரை வீட்டிலிருக்கும் பொருள்களை கொண்டு வீட்டிலேயே தயாரிக்கலாம்.
எப்போதெல்லாம் க்ளென்சிங் செய்து முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்குகிறீர்களோ அப்போதெல்லாம் டோனரையும் பயன்படுத்தி சருமத்துவாரங்களை மூடிவிட்டால் முகம் புத்துணர்சியாக பொலிவாக இருக்கும். சிட்ரிக் டோனர் என்று சொல்லகூடிய ஆரஞ்சு பழத்தோலில் இருந்து தயாரிக்ககூடிய டோனரை தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.
ஆரஞ்சு பழத்தோல்
இந்த ஆரஞ்சு பழத்தோலை கொண்டு தயாரிக்கப்படும் டோனரானது கோடைக் காலத்துக்கு ஏற்ற டோனர். சருமத்துவாரங்கள் பெரிதாக திறந்திருக்கும் போது அதை நன்றாக இறுக்க இந்த டோனர் நிச்சயம் பயனளிக்கும். இதை அதிக நாள் பயன்படுத்த முடியாது. ஒருவாரம் வரை வைத்திருந்து இதை பயன்படுத்தமுடியும்.
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழத்தோலுக்கு மாற்றாக எலுமிச்சை தோலையும் பயன்படுத்தலாம். ஆனால் எலுமிச்சை சருமத்தின் இறந்த செல்லை நீக்கும். முகத்தில் இருக்கும் அழுக்கை வெளியேற்றும். ஆனால் ஆரஞ்சு முகத்துக்கு நிறத்தை கொடுக்கும். முகம் சோர்வடைந்து கருமை படர்ந்திருந்தால் அதை நீக்கி அழகிய நிறத்தை கொடுக்கும்.
தயாரிக்கலாம்
ஆரஞ்சு பழத்தோல் – 2 பழங்களுக்குரியது
புதினா இலைகள் – 10
தண்ணீர் – 2 டம்ளர்
ஆரஞ்சு பழத்தோலிலிருந்து நாரை உரித்து சுத்தமாக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். புதினா இலைகளை மண் போக கழுவி நறுக்கி வைக்கவும். அகலமான பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்கவையுங்கள். நன்றாக கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆரஞ்சு பழத்தோலையும். புதினா இலையையும் சேர்த்து பாத்திரத்தை மூடி விடுங்கள். 8 மணி நேரமாவது ஊறவேண்டும். பிறகு அதை வடிகட்டி ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிவைக்கவும்.
தினமும் மாய்சுரைசர், க்ளென்சிங் செய்யும் போதெல்லாம் இதை பயன்படுத்துங்கள். தேவையெனில் இதனுடம் 10 சொட்டு க்ளிசரின் சேர்த்துகொள்ளலாம். தினமும் காலை, இரவு முகத்துக்கு பயன்படுத்தி பாருங்கள். உங்கள் முகமா இது என்று ஆச்சரியப்படத்தக்க அளவில் நிறமும் அழகும் பளிச்சென்று இருக்கும்.
நன்மை என்ன
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு தோல் முகத்துக்கு மினுமினுப்பை தருகிறது. சருமத்துவாரங்களில் இருக்கும் அழுக்கை வெளியேற்றுகிறது. துவாரத்தை இறுக்கவும் செய்கிறது. சருமத்தை பாதுகாக்கவும் செய்கிறது.புதினா இலைகள் சருமத்தை வறட்சியிலிருந்து நீக்கி சருமத்தை மிருதுவாக்குகிறது. சருமத்துக்கு ஈரப்பதம் அளிப்பதோடு புத்துணர்ச்சியாகவும் இருக்கிறது.
சருமத்துவாரங்களில் அழுக்குகள் வெளியேறியது. அவை விரிந்திருக்கும். அவை இயல்பாக (மூடுவதற்குள்) அடைந்துவிடும். ஆனால் துவாரங்களில் தூசு, கிருமிகள் உடனே செல்ல அதிகம் வாய்ப்புண்டு. அதனால் தான் முகத்துக்கு சருமத்துவாரங்களை ஆரோக்கியமாக மூடிகொள்ளும் வகையில் டோனர் பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள்.
ஆரஞ்சு பழத்தோலை வீணாக்காமல் டோனர் செய்து பயன்படுத்துங்கள். அழகு மிளிர்வதை கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.
கருத்துக்களேதுமில்லை