படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ள சமுர்த்திப் பயனாளிகள்: அரசாங்க அறிவிப்பு என்னாயிற்று- சிவமோகன்

சமுர்த்திப் பயனாளிகள் படுமோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன், சமுர்த்தி கடன் வழங்கலில் அரசு சொன்னதை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (புதன்கிழமை) அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “அரசாங்கம் அனைத்து சமுர்த்திக் குடும்பங்களுக்கும் பத்தாயிரம் ரூபாய் கடன் வழங்குவதாக பகிரங்க அறிவித்தல் விடுத்தது. இறுதியில் அதற்கான எழுத்து மூலமான அறிவித்தல்கள் வழங்கப்படும்போது முதற்கட்டம் ஐயாயிரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தது.

மேலும், அவர்களது கடன், சமுர்த்தி பயனாளர்களின் சேமிப்பில் பணம் இருந்தால் மட்டுமே வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐயாயிரத்துக்கும் குறைவாக சேமிப்பில் பணம் இருப்பவர்களுக்கு சேமிப்பில் இருக்கும் பணத்தில் என்பது (80%) வீதம் மட்டுமே வழங்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. இதனால் படுமோசமாக சமுர்த்திப் பயனாளிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவின் பின்னர் சமுர்த்தியில் உள்வாங்கப்படாத பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் கடந்த ஆட்சியாளர்களின் இறுதிக் காலத்தில் உள்வாங்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கான இந்த் கடன் நிதி ஒருதடவைகூட வழங்கப்படவில்லை. அதனால் அவர்கள் விரக்தியடைந்துள்ளார்கள்.

மேலும், இந்த சமுர்த்திக் கடன் வழங்கும் நடவடிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டவர்களை அரசியல் ரீதியில் பழிவாங்க முயற்சிக்கிறதா இந்த அரசு என பொதுமக்கள் கேள்வி கேட்கிறார்கள்.

எனவே அரசாங்கம் ஒரு தீர்மானத்தை எடுத்து அறிவிப்பதாக இருந்தால் உருப்படியாக எதுவும் செய்ய முடியுமா என்று தீர்மானித்து விட்டு அறிவித்தல்களை வழங்க வேண்டும். வெறுமனே அறிவித்தல்களை வழங்கிவிட்டு மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதிலும் இந்த கொரோனா தொற்றுக்கு உட்பட்டு அன்றாடம் வேலை செய்து பிழைப்பு நடத்துபவர்கள் பெண்தலைமைத்துவத்தில் உள்ளவர்கள் மாற்று வலு உள்ளவர்கள் என பெருந்தொகையானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

எனவே இந்த விடயத்தை நிவர்த்தி செய்யும் முகமாக அவர்களின் சேமிப்பு புத்தகங்களில் பணம் இருந்ததோ இல்லையோ சகல சமுர்த்தி பயனாளிகளுக்கும் வட்டியற்ற கடன் என்ற அடிப்படையில் உடன் வழங்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைத்தியகலாநிதி சிவமோகன் தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.