முட்டை சாப்பிட பயமா இருந்தா முகத்துக்கு பயன்படுத்துங்க.. அழகாவாச்சும் இருப்பீங்க..
கொரோனா தொற்றால் இறைச்சி சாப்பிடுவதை பலரும் தவிர்த்துவருகிறார்கள். குறிப்பாக கோழி இறைச்சியு, முட்டையும் சாப்பிடுவதில்லை. அதே நேரம் முட்டையின் வெள்ளைக்கருவை கொண்டு முகத்தை அழகுப்படுத்தும் குறிப்புகளை இங்கு பார்க்கலாம் .முட்டையின் வெள்ளைக்கருவில் புரதங்கள், ஜிங்க், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கிறது. கூந்தலுக்கும் முகத்துக்கும் பல நன்மைகளை அளிக்கும். முக்கியமாக சருமத்தின் தளர்வை குறைத்து இறுக்கமாக வைத்திருக்கிறது. முட்டை வீட்டில் இருந்தால் தினம் ஒரு அழகு குறிப்பை செய்து முகத்தையும் கூந்தலையும் பளபளப்பாக்குங்கள்.
சரும சுத்தம்
தேவை – முட்டையின் வெள்ளைக்கரு – 2 டீஸ்பூன்
கெட்டித்தயிர் – 2 டீஸ்பூன்
கற்றாழை அல்லது பன்னீர் அல்லது நறுமண எண்ணெய் – கால் டீஸ்பூன்
மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும். முகத்தை சுத்தமான நீரில் கழுவி உலர துடைத்து கீழிருந்து மேல் நோக்கி முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை முகத்தில் ஊறவிட்டு பிறகு பஞ்சை கொண்டு அழுத்தி துடைத்துவந்தால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறும். சருமம் பளபளவென்று இருக்கும்.
குறிப்பு:
முட்டையின் வாடை பிடிக்காதவர்கள் நறுமண எண்ணெய் சேர்த்துகொள்ளலாம்.
வறண்ட சருமம்
முட்டையின் வெள்ளைகரு – 3 டீஸ்பூன்
சுத்தமான தேன் – 2 டீஸ்பூன்
காய்ச்சாத பால் – 3 டீஸ்பூன்
ஸ்ட்ராபெர்ரி, அவகேடோ, பப்பாளி பழங்களில் ஏதேனும் ஒரு துண்டு மிக்ஸியில் மசித்தது – 2 டீஸ்பூன்
கற்றாழை சாறு – 1 டீஸ்பூன்
அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து எக் பீட்டரில் அடித்து வைத்துவிடுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 30 நிமிடங்கள் கழித்து முகத்தை மிதமான நீரில் கழுவி எடுங்கள். சருமத்தின் வறட்சி நீங்கும். தொடர்ந்து வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கூட செய்யலாம். இப்படி செய்து வந்தால் சருமத்தின் வறட்சி நீங்கும். ஈரப்பதமாக இருக்கும்.
சருமத்தின் தன்மையை பொறுத்து பொருள்களை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் அவை அழகை சேதாரமாக்கும்.
எண்ணெய்பசை சருமம்
முட்டையின் வெள்ளைகரு – 3 டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு – 1டீஸ்பூன்,
கற்றாழை சாறு – 2 டீஸ்பூன்
மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி அவை முகத்தை இறுக்கமாக காய விட்டு பிறகு முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கும் எண்ணெய் வடிதல் நிற்கும்.
குறிப்பு
இந்த ஃபேஸ் மாஸ்க் எண்ணெய்பசை சருமத்துக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். எண்ணெய் பசையை கொண்டிருப்பவர்கள் முகத்தில் பருக்களும் இருந்தால் எலுமிச்சை சாறை அதிகம் பயன்படுத்த வேண்டாம். இவை பருக்களில் எரிச்சலை உண்டாக்கிவிடும். கூடுதலாக ஒரு டீஸ்பூன் பால் சேர்த்துகொள்ளலாம்.
முகச்சுருக்கம் தடுக்க
முட்டை- 3 டீஸ்பூன்,
தேன் – 2 டீஸ்பூன்,
கோதுமை தவிடு அல்லது பொடித்த ஓட்ஸ் – 1 டீஸ்பூன்
மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் இலேசாக ஸ்க்ரப் செய்வது போல் செய்து பேக் போட்டு முகத்தை காயவைத்து 30 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் சருமம் இறுகும். இளவயது தோற்றமாக இருக்கும்.
முகத்தில் சுருக்கம் இளவயதில், நடுத்தர வயதில் சுருக்கம் என்பது அதிகரித்துவருகிறது. சருமத்தில் இருக்கும் கொலாஜன் உற்பத்தியின் சுரப்பு குறைவதால் சருமத்தின் இறுக்கம் தளர்ந்து சருமம் விரிகிறது. முட்டையின் வெள்ளைகருவில் இருக்கும் புரதமானது சருமத்தை இறுக்கமாக வைத்திருக்கும். வயது தெரியாது.
முகத்துக்கு நிறம்
உடனடி அழகு குறிப்புக்கு உதவகூடிய சூப்பர் டிப்ஸ் இது. முட்டையின் வெள்ளைகருவை மட்டும் எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். கண்களுக்கு கீழ், உதட்டுக்கு மேல், தாடையில், மூக்கு நுனியில் மசாஜ் செய்து வந்தால் முகத்தில் படிந்திருக்கும் கருமை நிறம் மறைவதோடு முகத்தில் தேவையற்ற முடிகள் வளர்வதும் தடுக்கப்படும். முகத்தில் கருமையும் மறையும். கருவளையம் இருந்தாலும் முட்டையின் வெள்ளைக்கருவை கருவளையம் இருக்கும் இடங்களில் தேய்த்துவந்தாலே கருவளையமும் காணாமல் போகும்.
கூந்தலுக்கு
கூந்தலுக்கு வேர்வரை போஷாக்கு தரக்கூடியது முட்டையின் வெள்ளைகரு. அரை கப் அளவு எடுத்து கூந்தலின் மயிர்க்கால்கள் முதல் வேர்க்கால்கள் வரை தடவி காயவிட்டு தலையை அலசினால் கூந்தல் பட்டுபோன்று மென்மையாக இருக்கும்.
முட்டையின் வெள்ளைக்கருவை பயன்படுத்துவதால் அவற்றில் வாடை இருக்காது. அதனால் தலைக்கு தாரளமாக பயன்படுத்தலாம். நாட்டுக்கோழி முட்டையில் கூடுதலாக பலன் கிடைக்கும். இனி வீட்டில் முட்டை இருந்தால் தாரளமாக பயன்படுத்துங்கள். இப்போதைய சூழலில் சாப்பிடவில்லை என்றால் என்ன? அழகை பராமரிக்கலாமே!
கருத்துக்களேதுமில்லை