கிருமிகள் வெளியில் மட்டுமல்ல வீட்டிலும் இருக்கலாம்!

வெளியிலிருந்து மட்டும்தான் கிருமிகள் வீட்டுக்குள் வரும் என்று நினைக்க வேண்டாம். வீட்டிலும் கூட கிருமிகள் இருக்கலாம். அவை கண்ணுக்கு தெரியாமல் இருப்பதால் எப்போதும் வீட்டையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். அப்படி செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

வீட்டுக்குள் கிருமித்தொற்று வராமல் இருக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் என்று தனியாக பட்டியல் இட வேண்டியதில்லை. காலங்காலமாகவே முன்னோர்கள் தொட்டு இன்று வரை அதை உரிய முறையில் கடைபிடித்தும் வருகிறோம். தற்போது  வைரஸ் தொற்று காரணமாக கூடுதல் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

பொதுவாக நாம் வெளியிடங்களுக்கு செல்லும் போது எப்படியெல்லாம் நம்மை பாதுகாப்பாக வைத்துகொள்ள வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறோம். வெளியிலிருந்து வீடு திரும்பும் நேரத்தில் வீட்டையும் கிருமி தாக்காமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.



உடைகளை மாற்றுங்கள்

வைரஸ் தொற்று கண், மூக்கு, வாய் வழியாக பரவுவதாக சுகாதாரத்துறை எச்சரித்துவருகிறது. வெளியிலிருந்து வீடு வந்ததும் முதலில் கைகளை சோப்பு நீரில் கழுவி பிறகு உடைகளை மாற்றுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டுக்குள் வந்ததும் உடைகளை மாற்றி விடும்படி அறிவுறுத்துங்கள். கையோடு ஆடைகளை அப்புறப்படுத்தி அதை துவைக்கவும் செய்யுங்கள். துணிகளை அலசும் போது சில துளி டெட்டால் விட்டு அலசுவது துணிகளில் இருக்கும் கிருமிகளை அழிக்க உதவும். அழுக்கு துணிகளை சேர்த்து வைக்காதீர்கள்.

வெயிலில் காய விடுங்கள்

நகரங்களில் இடவசதி காரணமாக துணிகளை காயவைக்க ரெடிமேட் கொடிகளை பயன்படுத்துகிறார்கள். இதை மொட்டை மாடியில், திறந்த வெளியில் வைத்து பயன்படுத்தலாம் என்றாலும் அவசர நேரத்திலும் பல அடுக்கு மாடிகளை கொண்டிருப்பதாலும் மொட்டை மாடியில் துணிகளை வெயில் பட காயவைப்பதில்லை. அதோடு கோடைக்காலம் என்பதால் வீட்டிற்குள் படரும் வெப்பமே துணிகளை உலர்த்த போதுமானதாக இருக்கிறது என்று நினைத்துவிடுகிறார்கள்.

தற்போது  கொரோனா வைரஸ் குறித்த பாதுகாப்பு நடவடிக்கையில் துணிகளை சேர்க்க வேண்டாம் என்பதோடு துணிகளை நல்ல வெயிலில் இரண்டு மணி நேரமாவது உலர விட்டு எடுங்கள். வெயில் படும் போது (26 டிகிரி முதல் 27 டிகிரி வரை) வைரஸ் கிருமிகளால் உயிர்வாழ முடியாது. பொதுவாகவே தொற்று கிருமிகள் பரவாமல் இருக்கவும், சரும வியாதி பிரச்சனைகள் வராமல் இருக்கவும் ஆடைகளை வெயிலில் உலர்த்தி எடுப்பதே நல்லது.

தரை சுத்தம்

வீடு சுத்தமாக இருந்தாலும் வெளியிலிருந்து வீட்டுக்கு வரும் போது தொற்றுக்கிருமிகள் ஒட்டிவரவும் வாய்ப்புண்டு. அதனால் தினசரி வீட்டை கிருமி நாசினி கொண்டு துடைத்து எடுப்பது கிருமிகளை விரட்டி அடிக்கும். தினசரி இல்லையென்றாலும் வாரத்துக்கு இருமுறையாவது வீட்டை துடைத்து எடுப்பது நல்லது. வீடு துடைக்கும் போது கிருமி நாசினிகளோடு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துகொள்வதும் நல்லது.

வெளியிலிருந்து வரும் போது கை, கால்களை கழுவிய பிறகு உள்ளே வருவது நல்லது. முன்பு வீட்டில் நுழைந்தவுடன் முற்றம் இருக்கும். கை, கால்களை கழுவியபடி தான் உள்ளே வருவார்கள். இப்போது வீட்டுக்குள் வந்த பிறகு தான் கை, கால்களை சுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது. குழந்தைகள் விளையாட்டு போக்கில் கால்களை சுத்தம் செய்யாமல் படுக்கையில் விழுவதுண்டு. இந்த விஷயத்தில் குடும்பத்தில் அனைவரிடமும் கண்டிப்பு காட்டுங்கள்.

குளிர்ந்த உணவுகளுக்கு நோ

சமைக்கும் போது இரண்டு நாட்களுக்கு தேவையான உணவை செய்வது உண்டு. உணவை அவ்வபோது சமைத்து சாப்பிடுவது பாதுகாப்பாக இருக்கும். இயன்றவரை ஒவ்வொரு வேளைக்கும் தேவையான அளவுக்கு மட்டும் சமைத்து மிதமான சூட்டிலேயே அதை பரிமாறவும் செய்துவிடுங்கள். உணவு போலவே நீரும் மிதமான சூட்டிலேயே இருக்கும் படி வைத்திருங்கள். கோடைக்காலம் வந்தாச்சு என்றதும் ஃப்ரிட்ஜ்ஜில் ஜில் வாட்டர் வைப்பது வழக்கம். ஆனால் தற்போது வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக குளிர்ந்த நீர் அருந்தாமல் மிதமான வெந்நீரை மட்டுமே குடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

அத்தியாவசியமான குறிப்பு

வாசல் புற கதவுகளின் கைப்பிடி, வாயில் கேட் போன்றவற்றையும் தினசரி கிருமி நாசினி கொண்டு துடைத்து விடுங்கள். வாசலில் இருக்கும் மிதியடிகளையும் அவ்வபோது சுத்தம் செய்யுங்கள். சிறிது காலத் துக்கு குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம் முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள். தொண்டையில் கரகரப்பு இருந்தால் உப்பு நீரில் வாய் கொப்புளியுங்கள். காற்றால் இவை பரவுவதில்லை என்றாலும் நீர்த்திவலைகளால் எளிதில் தொற்றக்கூடியது என்பதால் வீட்டையும் கிருமிகள் இல்லாமல் பாதுக்காப்பதும் அவசியம்.

வீட்டையும் கழிப்பறைகளையும் அவ்வபோது சுத்தம் செய்வது மிகவும் நல்லது. அதே போன்று சமைக்கும் இடத்தையும் தினசரி சுத்தம் செய்வதும் மிகவும் நல்லது. சமைக்கும் போது காய்கறிகளையும் பழங்களையும் நறுக்குவதற்கு முன்பு ஓடும் நீரில் அலசுங்கள். பிறகு நறுக்கி பயன்படுத்துங்கள். பால் பாக்கெட்டை பிரிக்கும் போது கூட அதை பிரிப்பதற்கு முன்பு நீரில் அலசிய பிறகு கத்தரித்து பாலை ஊற்றுங்கள்.

எப்போதும் வீட்டை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும் என்றாலும் கூட தற்போது பாதுகாப்பு குறித்த விஷய ங்களில் இன்னும் கூடுதல் கவனத்தை செலுத்துவது தற்போது அவசியமானது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.