ஊரடங்கு வேளையில் திருட்டில் ஈடுபட்ட ஏழு பேர் யாழில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 7 பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான களவாடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணம் அரியாலை பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கண்காணிப்பு கெமரா, மின்மோட்டார் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் களவாடப்பட்டமை தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது நாவற்குழியினைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையின் அடிப்படையில் கடந்த வாரம் யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதியில் வயது முதிர்ந்த ஒருவர் தனது ஓய்வூதிய பணத்தை எடுப்பதற்காக யாழ் நகரத்துக்கு வருகை தந்த போது அவரின் வீட்டுக்குள் புகுந்து தொலைபேசி மற்றும் அவருடைய கடன் அட்டை போன்ற பெறுமதியான பொருட்களை திருடிய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், களவாடப்பட்ட பொருட்களை விற்பனை செய்தமை, களவாடப்பட்ட பொருட்களை உடைமையில் வைத்திருந்த அடிப்படையில் மொத்தமாக நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.