ஊரடங்கு தொடரட்டும்! தளர்த்தவே வேண்டாம்!! – ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து

“கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளது என்பதைக் கருத்தில்கொண்டு, தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுக்கக்கூடாது.”

– இவ்வாறு இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவிக்கையில்,

“கொரோனா வைரஸ் நோய், மற்றைய நாடுகளைப் போன்று, இலங்கையில் பரவவில்லை என்பது உண்மை. மற்றைய நாடுகளில் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தாலும் இலங்கையில் இப்போதைக்கு 7 நோயாளிகள் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். காரணம் இலங்கையின் வைத்திய நடவடிக்கைகள் சிறந்த முறையில் உள்ளன. ஆனால், இவை அனைத்தையும் இப்போதே கைவிட்டு விட முடியாது.

எனவே, இப்போது கடைப்பிடிக்கப்படும் இறுக்கமான சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும். ஊரடங்குச் சட்டத்தைத் தொடர்ந்தும் பிறப்பிக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் காரணத்தாலேயே, ஜனாதிபதியால் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. அவ்வாறு ஊரடங்குச் சட்டத்தை தளர்த்த வேண்டுமாயின் இப்போது கொரோனா வைரஸ் தொற்றில் அடையாளம் காணப்பட்டுள்ள நபர்களையும் அவர்களுடன் தொடர்புகளை பேணிய ஏனைய நபர்களையும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் வைத்து அவர்களை மேலும் பரிசோதனை செய்து அவர்கள் ஆரோக்கியமான நிலையில் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே ஊரடங்கைத் தளர்த்த வேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.