உயர் கல்வி, பயற்சி நெறிகளுக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களை அழைத்து வருவது பற்றி அரசு கவனம்…

உயர் கல்வி மற்றும் பயற்சி நெறிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“உயர் கல்விக்காக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் மாணவர்களை நாட்டுக்கு அழைப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஆராய்ந்து வருகின்றது. அத்தோடு பயிற்சிகளுக்காகச் சென்றவர்களையும் நாட்டுக்கு அழைத்து வருவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உயர் கல்வி மற்றும் பயிற்சிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளவர்கள் தாய்நாட்டுக்குத் திரும்ப எதிர்பார்ப்பதாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களது விபரங்கள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சால் பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் வெவ்வேறு நாடுகளிலும் உள்ள தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் அந்த நாடுகளிலுள்ள இலங்கையர்களைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

எனினும், இதுவரையில் இலங்கையில் விமான நிலையங்கள் திறக்கப்படவில்லை. எனவே, கொரோனா வைரஸ் பரவலின் அபாய நிலையிலிருந்து முழுமையாக மீண்ட பின்னரே ஜனாதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் விமான நிலையங்களைத் திறப்பதைப் பற்றி கவனம் செலுத்த முடியும்.

எனவே, நாட்டு மக்கள் அனைவரும் அதன் பாரதூரத் தன்மையை உணர்ந்து செயற்பட வேண்டும். வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான சுகாதார நடவடிக்கைகள் ஸ்திரப்படுத்தப்பட்டதன் பின்னரே இவ்வாறான நடவடிக்கைகளில் கவனம் செலுத்த முடியும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.