ஊரடங்கு தளர்வானது பலரது தியாகங்களை பயனற்றதாக்கியுள்ளது. முதல்வர் ஆனல்ட் ஆதங்கம்
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா தாக்கத்திலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் வகையில் இடைவிடாது தொடரப்பட்ட ஊரடங்கானது இன்று யாழிலும் விலக்கப்பட்டது.
இக்கொடிய வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு சுகாதாரத் துறையினர், வைத்தியர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் வழங்கிக்கொண்டிருக்கும் தியாகங்களும், சேவைகளும் ஊரடங்கு தளர்வினால் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கினால் மக்களின் அன்றாடத் தேவைகளுடன் தொடர்புபடாத பல கடைத் தொகுதிகள் யாழ் நகர்ப்பகுதியில் செயற்பட்டமையை காணக்கூடியதாக இருந்தது. குறிப்பாக மதுபானசாலைகளில் அதிகமானோர் அலைமோதியதை அவதானிக்க முடிந்தது. இவை மிகுந்த வேதனைக்குரிய விடயமாகும். அத்தியவசியமற்ற கடைத் தொகுதிகளை வைரஸ் தாக்கம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இக் காலப்பகுதியில் மூடி ஒத்துழைப்பு வழங்குவதே சிறப்பானதாகும். இதனை உரிய தரப்பினர் உணர்ந்து செயற்பட முன்வர வேண்டும் என்பது எனது பகிரங்கமான வேண்டுகோளாகும்.
இன்றைய ஊரடங்கு தளர்வானது மக்களின் அன்றாட தேவைகளை நிறைவு செய்யும் வகையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே அமைந்திருக்க வேண்டும். ஆனால் மக்கள் தெருக்கள், கடைத் தொகுதிகள் மற்றும் பேரூந்துகளிலும் வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் கற்றுத்தந்த சமூக இடைவெளி, சுகாதார நடைமுறைகளை மறந்து பொறுப்பற்ற வகையில் செயற்பட்டமையை அவதானிக்க முடிந்தது. சிலரின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் பாரிய விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதை நாம் மறந்து செயற்படக் கூடாது. பொறுப்பற்றவகையில் மக்கள் செயற்படுவதால் ஏற்படக் கூடிய பாதக நிலைமைகளை எண்ணிப்பார்க்கையில் அச்சம் கொள்ளத் தோன்றுகிறது.
மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற நேரங்களில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதுடன், உரிய சுகாதார நடைமுறைகள் மற்றும் சமூக இடைவெளிகளை தவறாது பின்பற்றி சமூகத்தை பாதுகாப்பதில் தங்களின் பங்களிப்புக்களையும், ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும் யாழ் நகர்ப்புறத்திற்கு தொலை தூரங்களில் வசிப்பவர்கள் அனைவரும் நகர்ப்புறத்தில்தான் தமது அத்தியவசிய தேவைகளை நிறைவு செய்ய வேண்டும் என்றில்லை. முடியுமானவரை தமது வீடுகளுக்கு அண்மையில் உள்ள உள்ளூர் வர்த்தக நிலையங்கள், கடைத் தொகுதிகளில் தமது தேவைகளை நிறைவு செய்து கொள்வது நகர்ப்புறத்தில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதை தவிர்ப்பதற்கு வழிவகுக்கும்.
எனவே இதனை கருத்திற் கொண்டு வைரஸ் தொற்றிலிருந்து எம்மையும், பிறரையும் பாதுகாக்கும் இக் கூட்டு முயற்சியில் எல்லா சந்தர்ப்பங்களிலும் உரிய சுகாதார நடைமுறைகளை கடைபிடித்து அனைவரையும் பாதுகாக்கும் நாட்டின் ஒருமித்த முயற்சிக்கு ஒத்துழைக்குமாறு அனைவரையும் பகிரங்கமாக வேண்டிக் கொள்கின்றேன்.
கருத்துக்களேதுமில்லை