பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு சிறப்பு அதிகாரம்!

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகின்ற வேளைகளில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களை கைதுசெய்யும் வகையில் பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்கவால் இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படுகின்ற மாவட்டங்களில், தனிமைப்படுத்தல் சட்டங்களுக்குக் கீழ், சுகாதார நடைமுறைகளை  மீறுபவர்கள் கைதுசெய்யப்படுவதுடன் அவர்களுக்கு ஆறு மாத சிறைதண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு, அரசாங்கத்தின் மட்டத்தில் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது பொதுமக்களின் கைகளிலேயே உள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அரச, தனியார் அலுவலகங்களில் பணிகளை முன்னெடுக்கும்போது, சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவது உறுதிபடுத்தப்பட வேண்டும் எனவும் அரச, தனியார் அலுவலகங்களின் உயர் அதிகாரிகளுக்கு, பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களுடன் பணிகளை முன்னெடுப்பதை அலுவலகங்களின் உயர் அதிகாரிகள் உறுதிபடுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விசேட சோதனை நடவடிக்கைகளுக்காக அலுவலகங்களுக்கு வருகைதரும் பொலிஸார், சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள் வழங்கும் ஆலோசனைகளுக்கு அமைவாக பணியாற்றுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட மாவட்டங்களிலுள்ள அரச, தனியார் அலுவலகங்களின் உயரதிகாரிகள், பகல் வேளைகளில், ஊழியர்களின் வெப்பநிலையை பரிசோதிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.