நாடாளுமன்றத்தை கூட்டும் திட்டமில்லை – தேர்தல் நடப்பது திண்ணம் கோட்டாபய அழுங்குப்பிடி
– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“அரசியல் ரீதியில் எதிர்க்கட்சிகள் எனக்கு நெருக்கடிகள் கொடுத்தால் அதனை நான் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றேன்” எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
“கொரோனா வைரஸுடன் பொதுத்தேர்தல் விடயத்தை உட்புகுத்தி எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் தேடுகின்றனர். அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது” எனவும் அவர் அடித்துக் கூறியுள்ளார்.
ஜூன் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 20ஆம் திகதி தீர்மானித்து வர்த்தமானி வெளியிட்டுள்ளது. ஆனால், மார்ச் 2ஆம் திகதி நாடாளுமன்றம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் கலைக்கப்பட்டிருந்தது. அரசமைப்புக்கு அமைவாக மூன்று மாத காலத்தினுள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அதன் பிரகாரம் ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் புதிய நாடாளுமன்றம் கூட வேண்டும். ஜூன் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டுள்ளமையால் புதிய நாடாளுமன்றம் ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் கூட முடியாமையால் அரசமைப்பு நெருக்கடி ஏற்படவுள்ளது எனப் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இந்தநிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டின் தலைவர் நான். ஜனநாயக ரீதியில் ஏகோபித்த ஆதரவுடன் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி நான். மக்களின் காவலன் நான். எனவே, நாட்டுக்கும் மக்களுக்கும் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். கொரோனா வைரஸையும் உடனடியாக இல்லாதொழிக்க வேண்டும். அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலையும் குறித்த காலப்பகுதிக்குள் வைத்தே தீர வேண்டும். இந்த இரண்டு விடயங்களும் எனக்கு முக்கியம். இந்த நிலைப்பாட்டில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை