கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் கடமைகளுக்கு திரும்பும் பொரிஸ்
கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நாளை முதல் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளுக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகமெங்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் பிரித்தானியா பல உயிரிழப்புகளை சந்தித்து வரும் அதேவேளை லட்சக்கணக்கானவர்கள் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகினார்.
ஆரம்பத்தில் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டமையினை தொடர்ந்து சுய தனிமைப்படுத்தலுக்கு தன்னை உட்படுத்திய அவர், பின்னர் நோய்த்தாக்கம் அதிகரித்த காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் இணைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து நலம் பெற்று வீடு திரும்பிய பொரிஸ் ஜோன்சன் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு போதுமான நடவடிக்கைகளை பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என எதிர்க்கட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில் பொரிஸ் ஜோன்சன் நாளை (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளுக்கு மீளத் திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘டவுனிங் ஸ்ட்ரீட்’ இன் உத்தியோகபூர்வ செய்தி தொடர்பாளர் இவ்வறிவித்தலை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் இதுவரையான காலப்பகுதியில், கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு இலக்காகி 20,319 பேர் உயிரிழந்துள்ள நிலையில் குறித்த வைரஸ் தாக்கத்தால் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 377 பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக பிரித்தானிய ஆளும் கொன்செர்வேட்டிவ் அரசாங்கம் பல விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் பொரிஸ் ஜோன்சன் மீண்டும் கடமைக்கு திரும்புவது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை