வறண்ட சருமத்துக்கு காரணம் என்னன்னு தெரிஞ்சா அதிகரிக்க விடமாட்டீங்க?
சருமம் மிருதுவாகவும், கடினமாகவும், வறட்சியாகவும். எண்ணெய் பசையாகவும் இருக்கும். இதில் வறண்ட சருமத்தை உருவாக்கும் காரணத்தை அறிதுகொண்டால் அதை தவிர்க்க முயற்சிக்கலாம். அதற்கு முன்பு உங்கள் சருமம் எதனால் வறட்சியை அடைந்தது என்று தெரிந்துகொள்வது அவசியம். தினமும் கண்ணாடி முன்பு நிற்கும் போது உங்கள் முகத்தை தொட்டு பார்க்கும் போதெல்லாம் சருமம் எப்படி இருக்கிறது என்பதையும் கவனியுங்கள். இதன் மூலம் ஆரம்பத்திலேயே சருமம் வறட்சியாவதை கவனிக்கவும் முடியும். அதை தவிர்க்கவும் முடியும். கீழே கொடுத்திருக்கும் காரணங்கள் கூட உங்கள் சருமத்தை வறட்சிக்குள்ளாக்கலாம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
தட்ப வெப்பநிலை
பருவ நிலைக்கேற்ப சருமத்திலும் மாற்றங்கள் உண்டாகிறது. மென்மையான முகத்தை கொண்டிருந்தாலும் குளிர்காலம் வரும் போது முகம் வறட்சியை சந்திக்கும். அதே போன்று தான் கோடைக்காலங்களிலும் சருமம் வறட்சியை சந்திக்கும். இவை பொதுவானவர்களுக்கானது என்றாலும் இலேசான வறட்சியை கொண்டிருப்பவர்களின் சருமம் சற்று கூடுதலாக வறட்சியை சந்திக்கும்.
இவை தவிர எப்போதும் வெளியில் வெயிலில் அலையும் போது சருமம் ஈரப்பதம் இழந்து விடக்கூடும். சருமத்துக்கு போதுமான ஈரப்பதம் கிடைக்காத போது சருமம் இயல்பாகவே வறட்சியடையும். இதற்கு நீங்கள் வசிக்கும் இடமும் கூட காரணமாக இருக்கலாம்.
குளியல்
சிலருக்கு கூடுதலான சூட்டில் வெந்நீரை பயன்படுத்தி குளிக்கும் வழக்கம் உண்டு. சூடான வெந்நீர் சருமத்துக்கு எப்போதும் நன்மை செய்யாது. அதே போன்று அதிக நேரம் சுடுநீரில் குளித்துகொண்டே இருப்பதும் கூட தோலை வறட்சிக்குள்ளாக்கும். போதாக்குறைக்கு நீரின் தன்மை மிகுந்தளவு மாறிவிட்டது.
குளோரின் அதிகம் கலந்த நீர் முடியை பாதிக்க செய்யும் என்பது தெரியும். அதே போன்று அவை சருமத்தையும் பாதிக்கும். பெரும்பாலும் வீட்டில் குளிப்பவர்களை காட்டிலும் குளோரின் அதிகம் கலந்த நீச்சல் குளத்தில் குளிப்பவர்களின் தோல் படிப்படியாக வறட்சியாகவே இருக்கும். அதோடு குளிக்கும் போது நறுமணமிக்க அதிக இராசயனங்கள் கலந்த சோப்புகளை அதிகம் பயன்படுத்துவதும் கூட சருமத்தில் வறட்சியை உண்டாக்கும்.
மேக் அப் சாதனங்கள்
மேக் அப் பயன்படுத்துவதால் முகம் அழகாகுமே தவிர எப்படி வறட்சியை சந்திக்கும் என்று கேட்கலாம். மேக் அப் சாதனங்கள் பயன்படுத்துவது பிரச்சனையல்ல. ஆனால் சருமத்துக்கு ஒவ்வாத மேக் அப் சாதனங்களை மாற்றி மாற்றி பயன்படுத்துவதன் மூலம் வறட்சி ஆகலாம். அதிலும் அழகு கலை நிபுணர் அல்லது சரும பராமரிப்பு நிபுணரின் ஆலோசனையின்றி இரசாயனங்கள் கலந்தவற்றை அவ்வபோது மாற்றி மாற்றி பயன்படுத்துவதன் மூலமும் சருமம் பாதிக்கப்படும்.
குறிப்பாக சருமத்தின் பிஹெச் அளவை காட்டிலும் அதிகமாக இருக்கும் அழகு பொருளை பயன்படுத்துவதும் சரும வறட்சிக்கு காரணமாக இருக்கலாம். இன்னும் சிலர் சரும பராமரிப்புக்கு அவசியமான பொதுவான பராமரிப்பையும் மேற்கொள்ளாத போது சருமம் வறட்சிக்குள்ளாகும்.
சரும வியாதி
இவை எல்லோருக்குமானதல்ல. சரும வியாதிகளான சொரியாசிஸ், படை, தேமல் போன்ற பிரச்சனை கொண்டிருப்பவர்களுக்கும் சருமம் வறட்சியடையும். சரும வியாதி சரி செய்த பிறகு சருமத்தில் மென்மையை கொண்டுவருவது மிகவும் கடினமாக இருக்கும். தொடர் பராமரிப்பின் மூலமே சருமத்தை மென்மையாக்க முடியும். சாதாரண படை அல்லது தேமல் இருந்தால் கூட சருமம் வறட்சிக்குள்ளாகவே செய்யும்.
சரும வியாதி வந்த பிறகு சருமத்துக்கேற்ற க்ரீம் வகையறாக்களை மருத்துவரின் அறிவுரையோடு பயன்படுத்தினால் சருமத்தின் வறட்சியை தடுக்க முடியும். இல்லையெனில் சருமத்தில் சுரக்கும் சீபம் அளவு குறைந்து சருமம் இறுகிவிடும். வெகு சிலருக்கு சருமத்தில் வெடிப்புகள் போன்ற கோடுகளையும் பார்க்கமுடியும்.
போதுமான நீர்ச்சத்து
உடலில் நீர்ச்சத்து குறைந்தால் அவை சருமத்திலும் எதிரொலிக்கும். குளிர்காலத்தில் மென்மையான சருமம் கொண்டவர்களுக்கு கூட சருமம் வறட்சியடைய காரணம் போதுமான தாகம் இல்லாமல் நீர் குடிக்காமல் இருப்பதுதான். அதே போன்றுதான் கோடையில் எவ்வளவு நீர் குடித்தாலும் உடலுக்கு போதிய வறட்சி இல்லாததால் தான் சருமம் வறட்சி நிலைக்கு தள்ளப்படுகிறது.
அன்றாட உணவில் எண்ணெய் பண்டங்களும், நொறுக்குத்தீனிகளும், துரித உணவுகளும் கூட சருமத்தை வறட்சியடையவே செய்கின்றன. தினமும் எவ்வளவு நீர் குடிக்கிறீர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
உங்கள் சருமத்தை அவ்வபோது தொட்டு பாருங்கள். இலேசான வறட்சியும் கடினமும் இருந்தாலும் கூட அதற்கு காரணம் மேற்கண்டவற்றில் ஒன்றாக இருக்கலாம் என்பதால் அதை தவிர்க்க முயலுங்கள். பிறகு உங்கள் சருமத்தில் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.
கருத்துக்களேதுமில்லை