முல்லைத்தீவு மாவட்ட நிலைமைகள் தொடர்பாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் தகவல்!
முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் நேற்று (திங்கட்கிழமை) மாலை ஊடகங்களிடம் தெரிவிக்கையில், “முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தளவில் மார்ச் மாதம் 16 ஆம் திகதிக்கு பின்னர் இன்று வரை வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 128 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தல் காலப்பகுதியை முடித்துள்ளனர். தற்போது வெளிநாடுகளில் இருந்துவந்த எவருமே சுய தனிமைப்படுத்தலில் இல்லை.
அத்துடன், வெளிமாவட்டங்களில் அல்லது அபாயம் உள்ள மாவட்டங்களில் இருந்து வருகைதந்த 680 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். அந்தவகையில் அவர்கள் வீடுகளில் இருந்து எமக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். அவர்களில் இன்னும் 25 பேர் தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தப்படுத்தலில் இருக்கிறார்கள்.
இதுதவிர, அடுத்தக் கட்டமாக கட்டாய சுயதனிமைப்படுத்தலில் இரண்டு வாரங்களை நிறைவுசெய்து எமது பிரதேசத்திற்கு வந்து இங்கே சுய தனிமைப்படுத்தப்பட்டு இருந்த வெளிநாடுகளைச் சேர்ந்த 8 பேரும் உள்ளூர் மக்கள் மூன்று பேர் ஆகியோரும் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்துள்ளனர்.
இதனைவிடவும் பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் முறையான அனுமதி இல்லாமல், அதாவது தாங்கள் இருக்கின்ற பகுதி சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர், அரசாங்க அதிபர் மற்றும் பொலிஸ் ஆகியோரிடமிருந்து முறையான அனுமதி பெறாது எமது மாவட்டத்திற்கு வருகை தந்தவர்களை நாங்கள் கண்காணிப்பில் வைத்திருக்கின்றோம். அந்தவகையில் முல்லைத்தீவு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 20 பேரும் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 86 பேரும் வெலிஓயா சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் இரண்டு பேரும் கண்காணிப்பட்டுவருகின்றனர்.
மேலும், தற்போது எமது மாவட்டத்திலே பிற மாவட்டங்களிலிருந்து கட்டாயதனிமைப்படுத்தலுக்காக அழைத்துவரப்பட்டவர்கள் மூன்று இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
கேப்பாபுலவு பகுதியில் அமைந்திருக்கும் விமானப்படை முகாமின் 259 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள். அதேபோன்று கேப்பாபுலவு பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் 160 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள். இதுதவிர வெலிசறை கடற்படை முகாமில் இருந்து விடுமுறையில் வீடு வந்த கடற்படைச் சிப்பாய் கொரோனா தொற்று உடையவர் என அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் பயணம் செய்த 71 இராணுவத்தினர் புதுமாத்தளன் பகுதியில் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்கிறார்கள்.
முல்லைத்தீவு, மாவட்டத்தில் இதுவரை எந்தவொரு நோயாளரும் அடையாளம் காணப்படவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்திலே தனிமைப்படுத்தல் நிலையங்களில் சந்தேகத்துக்கிடமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். கட்டாய தனிமைப்படுத்தலிலும் இருக்கிறார்கள்.
எனவே எதிர்காலத்தில் நாங்கள் எதிர்நோக்கக் கூடிய பிரச்சினைகள் தொடர்பாக ஆயத்த வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது. அந்தவகையிலே சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்களது எண்ணிக்கையைக் கொண்டோ அல்லது கட்டாய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களின் எண்ணிக்கையைக் கொண்டோ இங்குள்ள மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
எனவே மேலதிகமாக எமது மாவட்டத்திலேயே பாடசாலை மற்றும் பல்வேறு இடங்கள் சுய தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றம் பெற முடியும். அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறன. அவை அனைத்துமே எமது மக்களுக்கான பாதுகாப்பே அன்றி அதைவிடுத்து மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு தொடர்பு நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்று முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இயங்கி வருகிறது. மற்றையது மாங்குளத்தில் உள்ள மலேரியா தடுப்பு இயக்க அலுவலகத்தில் இயங்கி வருகின்றது இவை 24 மணி நேரமும் இயங்குகின்றன.
முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் 021 229 0102 என்ற இலக்கமுடைய அழைப்பு நிலையம் ஊடாக தனிமைப்படுத்தப்பட்டவர்களுடைய அறிக்கைகளை வெளியிடுவது, வீடுகளுக்குச் சென்று மருந்துகள் வழங்குவது, சிறுநீரக நோயாளர்களை தொடர்பான நடவடிக்கைகள் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இரண்டாவது அழைப்பு நிலையம் மாங்குளத்தில் உள்ள மலேரியா தடுப்பு இயக்க அலுவலகத்தில் இயங்கி வருகின்றது. இதன் இலக்கம் 021 206 0007 ஆகும். இதனூடாக அவசர நிலைமைகளின் போது நோயாளர்களை அழைக்கின்றபோது அவர்களுடைய போக்குவரத்திற்காக அம்பியூலன்ஸ் வண்டிகளை அனுப்பி அவர்களை வைத்தியசாலைக்கு அனுப்புவது, பிற மாவட்டங்களில் இருந்து எந்தவொரு அனுமதியும் இல்லாமல் வருகின்ற மக்கள் தொடர்பான தகவல்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஊடாக கிடைக்கப் பெறுகின்ற தகவல்களை அடிப்படையாகக் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை