பொதுத்தேர்தல் சாத்தியமில்லை – முதலில் கொரோனாவை இல்லாதொழிக்க சகலரும் ஒன்றிணைவோம் என்கிறார் ரணில்
“இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. தற்போதைய புள்ளிவிபரங்களைப் பார்க்கும்போது எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று நான் நம்பவில்லை. எனவே, முதலில் கொரோனா வைரஸை இல்லாதொழிக்க அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது விருப்பம்.”
– இவ்வாறு முன்னாள் பிரதமரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஹிந்து பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்த செவ்வியில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,
“எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலே ஜூன் மாதம் 20ஆம் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தத் திகதி குறிக்கப்பட்டுள்ளது. இதை நான் கடுமையாக எதிர்க்கின்றேன்.
கொரோனா ஒழிப்பில் சார்க் அமைப்பு அதன் பிரதான பங்கை வகிக்க வேண்டும். அதில் இந்தியா ஒரு முக்கிய வகிபாகத்தை வகிப்பது அவசியம்.
கொரோனா வைரஸை ஒழிக்க தெற்காசியாவுக்கு ஒரு மனிதாபிமானப் பொறிமுறை அவசியம்.
இந்த நிலைமையை நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து மாத்திரம் கையாள முடியாவிடின் இந்தியாவின் பெங்களூர் மற்றும் இலங்கையின் கொழும்பு நகரை அதற்குப் பயன்படுத்தலாம்” – என்று கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை