தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில், ஒரே நாளில், 161 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு நிலவரம், நோயாளிகள், குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்டவைத் தொடர்பாக, தமிழ்நாடு சுகாதாரத்துறை, செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இதுவரை இல்லாத அளவில், ஒரே நாளில் 161 பேருக்கு, பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதால், தமிழ்நாட்டில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 2 ஆயிரத்து 323 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று பாதிப்புக்கு உள்ளாகி, தீவிர உயர் சிகிச்சைக்குப் பின், 48 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம், கொரோனா பாதிப்பிலிருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 258 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 27ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில், 6 முறை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நூறைத் தாண்டியுள்ளது.
அதிக பட்சமாக ஏப்ரல் 28ஆம் திகதி 121 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதற்கு பிறகு, இப்போது தான், வைரஸ் தொற்று பாதிப்பு, மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது.
மாவட்ட அளவில், சென்னையில் ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில், இதுவரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 906 ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக, மதுரை மற்றும் செங்கல்பட்டில் தலா 5 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை முறையே 84 மற்றும் 78 ஆக உயர்ந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை