முல்லைத்தீவை அபாய வலயமாக்க முயற்சி- சிவமோகன் குற்றச்சாட்டு!
தனிமைப்படுத்தல் முகாம்களை அமைப்பதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தை அபாய வலயமாக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில், “முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த முதியவர்கள் இருவர் சுகயீனம் காரணமாக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சாவடைந்துள்ளனர்.
அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றில் சாவடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இது மக்களை அச்சமடையச் செய்துள்ளதுடன் முல்லைத்தீவை அபாயவலயமாக்கும் அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடாகவே பார்க்கமுடியும்.
அத்துடன், மாவட்டத்திற்கு மாவட்டம் பயணம் செய்வது தற்போது தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இன்னுமொரு மாவட்டத்தில் வசிக்கும் சந்தேகத்திற்கிடமானவர்களை எமது மாவட்டங்களுக்குக் கொண்டுவருவது சரியான தீர்மானமாக இருக்காது.
மேலும், போதைப் பொருளுக்கு அடிமையானவர்களும் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் தொற்றில்லாத மக்களுக்கும் தொற்றினை ஏற்படுத்தி அமைதியை குலைக்கும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளது.
எனவே இவ்விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுப்பதுடன் சந்தேகத்திற்கு இடமானவர்களை அந்தந்த மாவட்டங்களுக்குள்ளேயே தனிமைப்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை