நிலைமைக்கு தகுந்தபடி விளையாடுவது குறித்த திட்டத்தை டோனி தெளிவாக வைத்திருப்பார்: ரிஷப் பந்த்
களத்தில் இருக்கையில், நிலைமைக்கு தகுந்தபடி விளையாடுவது குறித்த திட்டத்தை டோனி தெளிவாக வைத்திருப்பார் என இந்தியக் கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் காப்பாளரான ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
மகேந்திர சிங் டோனியுடன் விளையாடிய அனுபவம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே ரிஷப் பந்த் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கிரிக்கெட் களத்துக்கு உள்ளேயும், வெளியேயும் டோனி எனக்கு ஒரு ஆலோசகர் போல் உதவியுள்ளார். எந்தவொரு பிரச்சினையை நான் சந்தித்தாலும், அவரை எளிதில் அணுகலாம்.
ஆனால், பிரச்சினைக்கு முழுமையான தீர்வை அவர் ஒருபோதும் சொல்லமாட்டார். ஏனெனில் நாம் முழுமையாக அவரை சார்ந்து இருக்கக்கூடாது என்று நினைப்பார். பிரச்ச்சினையை சரி செய்தவற்கான குறிப்புகளை மட்டும் கூறுவார். அது நாம் பிரச்சினையை தீர்க்க உதவிகரமாக இருக்கும்.
அவர் எனக்கு மிகவும் பிடித்தமான துடுப்பாட்ட இணை ஆவார். அவர் களத்தில் இருக்கையில், நிலைமைக்கு தகுந்தபடி விளையாடுவது குறித்த திட்டத்தை தெளிவாக வைத்து இருப்பார். அந்த திட்டத்தை நாம் பின்பற்றினால் போதுமானதாகும்” என கூறினார்.
ஐ.சி.சி.யின் அனைத்து சம்பியன் கிண்ணங்களையும் வென்றுக்கொடுத்த சாதனை அணித்தலைவராக பார்க்கப்படும் டோனி, இறுதியாக இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் நியூஸிலாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடினார்.
இதன்பிறகு அவர் எவ்வித போட்டிகளிலும் விளையாடவில்லை. ஆனால் ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த ஐ.பி.எல். ரி-20 தொடரில் விளையாடவிருந்தார். ஆனால் தற்போது இத்தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் டோனியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை