நிதியை ஒதுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது- பிரதமர்

நாடாளுமன்றம் நிதி ஒதுக்காத விடயங்களிற்கு நிதியை ஒதுக்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று(ஞாயிற்றுக்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஏனைய நாடுகள் முன்னெடுத்துள்ள நடவடிக்கை காட்டிலும் நாம் வெற்றிகரமான திட்டங்களை எடுத்துள்ளோம்.

தற்போதைய நிலையில் பொதுத்தேர்தல் இடம்பெற்றால் அது தமக்கு பாதகமாக அமையும் என்பதை நன்கு அறிந்து எதிர்தரப்பினர் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கூட்டி நிதி தொடர்பான நெருக்கடியை ஏற்படுத்த  அழுத்தம் கொடுக்கின்றார்கள்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் ஜனாதிபதியும், அரசாங்கமும் முன்னெடுத்த நடவடிக்கைகளை மக்கள் நன்கு அறிவார்கள்.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டாவிட்டால் ஜனாதிபதி, அரசாங்க தரப்பினரது குடியுரிமை, சொத்துக்கள்  அரசுடமையாக்கப்படும் என அச்சுறுத்தல் விடுத்து நாட்டில் அரசியல் ரீதியான நெருக்கடியை தோற்றுவித்துள்ளார்கள்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் அடையாளம் காணப்படாத நிலையில் நாடாளுமன்றம் கடந்த மார்ச் மாதம் கலைக்கப்பட்டது.

இதன்பின்னர் கொரோனா தொற்று நாட்டில் தீவிரமடைந்ததை தொடர்ந்து பொதுத்தேர்தலானது தேர்தல்  ஆணைக்குழுவினால் ஜூன் மாதம் 20ம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது

சுகாதார துறையினரது பரிந்துரைக்கு அமைய ஜூன் 20 பொதுத்தேர்தல் இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சுயாதீன முறையில் தேர்தல் ஆணைக்குழு தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டும்.

மக்களுக்கு நிவாரணம் வழங்கவே நாடாளுமன்றத்தை கூட்டுமாறு குறிப்பிடுவதாக எதிர்தரப்பினர் குறிப்பிடுகின்றார்கள். ஆனால் கடந்த பெப்ரவரி மாதம் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த கணக்கு வாக்கெடுப்பு பிரேரணைக்கு இவர்கள் ஆதரவு வழங்கவில்லை.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் நிதி அதிகாரம் அரசியலமைப்பின் 150(3)பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெறும்.

நல்லாட்சி அரசாங்கம்  கடந்த ஏப்ரல் 30 வரை இடைக்கால கணக்கறிக்கையை சமர்பித்துள்ளதால் ஜனாதிபதிக்கு நிதியை பயன்படுத்த  அதிகாரம் கிடையாது என வாதங்களை  குறிப்பிடுகின்றார்கள்.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தினை எந்நிலையிலும் ஜனாதிபதி கூட்ட மாட்டார். கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு.

சுகாதார, பாதுகாப்பு துறையினரது செயற்பாடுகளுக்கு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.