மும்மணிகள் ஆசியோடு நோய் அபாயம் அற்றுப்போனால் 11ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படும் – பந்துல

மும்மணிகள் ஆசியோடு நோய் அபாயம் அற்றுப்போனால், எதிர்வரும் 11 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படும் என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள நிலையில் கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய பாரிய அபாய வலயங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், சமூக பரவல் ஏற்படாது என நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து பயணம், வர்த்தக நிலையங்களைத் திறப்பது தொடர்பில் அனைத்து நிறுவனங்களுடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேறு நாடுகளில் தீவிரமாக நோய் பரவி வருகின்ற நிலையில், மரண எண்ணிக்கை இலங்கையை விட பல மடங்கு அதிகரித்துள்ள போதும், பொருளாதார சட்டங்களைத் தளர்த்துவதற்கு சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றமையால், இலங்கையிலும் அவ்வாறு இலகுபடுத்த எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெசாக் நாட்களில் மும்மணிகள் ஆசியோடு நோய் அபாயம் அற்றுப்போனால், எதிர்வரும் 11 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.