கூட்டமைப்பின் நேசக்கரம் எமக்கு இப்போது பலம்! – தமிழரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்கிறார் மஹிந்த
“எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அலரி மாளிகைக் கூட்டத்தைப் புறக்கணிக்கக்கூடும் என்றே நாம் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், தமிழ் மக்களின் நன்மை கருதி, நாட்டின் நலன் கருதி சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். அதுமட்டுமன்றி நெருக்கடியான இந்தச் சூழ்நிலையில் அரசுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். இது எமக்குப் பலமாக அமையும்.”
– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த திங்கட்கிழமை அலரி மாளிகைக் கூட்டத்திலும் அன்றைய தினம் மாலை எனது வீட்டில் நடைபெற்ற சந்திப்பிலும் கூட்டமைப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை நாம் பரிசீலித்து வருகின்றோம். அந்தக் கோரிக்கைகளில் பெரும்பாலானவை தமிழ் மக்கள் சார்பாகவே இருக்கின்றன.
எனவே, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குப் படிப்படியாகத் தீர்வு காணவேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கின்றது.
எனது அழைப்புக்கிணங்க கூட்டமைப்பினர் என்னை வந்து சந்தித்தமை தொடர்பில் எதிரணியிலுள்ள சிலர் விசமத்தனமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதிலிருந்து அவர்கள் அரசியல் இலாபம் தேடுகின்றனர் என்பது வெளிப்படையாகப் புலனாகின்றது. எனவே, அப்படிப்பட்டவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் உரிய பதிலை வழங்க வேண்டும்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை