மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு!

விவசாயப் பயிர்களுக்கு நீர் இறைக்கும் பொழுது மின்னொழுக்கு காரணமாக மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள குருக்கள்மடம் வெள்ளக்கட்டுப் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இசசம்பவம் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த 60 வயதுடைய செம்பாப்போடி தேசியசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விவசாயி குருக்கள்மடம் வெள்ளக்கட்டுப் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், பயிர் செய்கைக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் கம்பத்தில் இருந்து சட்டவிரோதமாக மின்சாரம் பெற்று மோட்டர் மூலமாக தண்ணீர் இறைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று மாலை விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை மின்கம்பத்தில் இருந்து மோட்டருக்குச் செல்லும் மின்சார வயர் ஊடாக ஏற்பட்ட மின்னொழுக்கினால் தாக்கப்பட்டு அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணையை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.