இலங்கையை ஐக்கியப்படுத்த கூட்டமைப்பு இணங்காது மாற்று அணியே தேவை! – இப்படிச் சொல்கின்றார் வாசுதேவ

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாட்டுடன் இணக்கத்துக்கு வருவது கடினமான செயலாகும். எனவே, நடுநிலையாக செயற்படக்கூடிய பலம்மிக்க சக்தியொன்று தமிழ் மக்கள் மத்தியில் உருவாகவேண்டும். ”

– இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தமிழ் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பிரதமரிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“இலங்கையை ஐக்கியப்படுத்த வேண்டுமெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஏதேனும் ஒரு விதத்தில் இணக்கப்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். ஆனால், கூட்டமைப்பின் நிலைப்பாடுகளால் இணக்கப்பாட்டுக்கு வருவதில் நெருக்கடி நிலை இருக்கின்றது. எனவே, கூட்டமைப்பைக்காட்டிலும் நடுநிலையாக செயற்படக்கூடிய பலமானதொரு சக்தி தமிழ் மக்கள் மத்தியில் எதிர்காலத்தில் உருவானால் நாட்டை ஐக்கியப்படுத்துவதற்கான சூழ்நிலை உருவாகும்.

குறிப்பாக தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்காமல் இலங்கையை ஐக்கியப்படுத்த முடியாது என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதேபோல் சிங்கள மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒருபோதும் உரிமைகளை பெற்றெடுக்க முடியாது என்பதை தமிழ் மக்களும் புரிந்துகொள்ளவேண்டும்.

அதேவேளை, ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரம் பகிரப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன்” – என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.