இனத்துக்காகத் தன்னை அர்ப்பணித்தவர் மாவை!

எமது அரசியல் பரப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா ஐயா பற்றி பல்வேறு எதிர் விமர்சனங்கள் கட்டவிழ்கின்றன. அரசியல், பொதுவாழ்வு என்று ஈடுபட்டாலே விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

”காய்த்த மரம் அதுமிகக் கல்லடிபடும்
கன்மவினை கொண்டகாயம் தண்டனைபெறும்-
வாய்த்த தவம் உடையவர் வாழ்பவர் என்றே
வஸ்துத் திருவடி தொழுது ஆடாய் பாம்பே”             என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.

]காய்த்த மரத்துக்குத்தான் கல் அடி படும். காய்க்காத மரத்துக்கு எவரும் கல் எறியமாட்டார்கன். அதுபோன்றுதான் மாவை சேனாதிராசா, தனக்கென வாழாது தமிழ் மக்களுக்காக வாழ்கின்றமையால் எதிர்விமர்சங்களுக்கு ஆட்படுகின்றார். இது உலக நியதி.

ஆனால், அதற்காக, உண்மைக்குப் புறம்பான – அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட – கீழ்த்தரமான – பல விமர்சனங்களை நரம்பில்லா நாக்கால், போராட்டம் என்றால் என்னவென்று – தமிழர் ஈழவிடுதலைப் போராட்டம் எப்ப ஆரம்பித்ததென்று – தெரியாத – போராட்டகாலத்துக்குப் பின்னர் பிறந்த – கத்துக்குட்டிகள் பலர் கதைப்பதுதான் வேதனையான விடயம்.

பொருள், சொத்து, சுகம் என்ற எவற்றோடும் பிறந்திராத மாவை சோ.சேனாதிராசா, அரசியலில் இன்று ஒரு சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் –  1989 ஆம் ஆண்டு அமிர்தலிங்கம் கொலைசெய்யப்பட்டபோது தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றுக்குள் நுழைந்த மாவை சேனாதிராசா, பின்னர் 1999 ஆம் ஆண்டு நீலன் திருச்செல்வம் கொலைசெய்யப்பட்டமையையடுத்து அவரது இடத்துக்கு மீண்டும் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்கும் தெரிவுசெய்யப்பட்டார். 2000 ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று – மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாவை, இன்றுவரை தொடர்ந்து நாடாளுமன்றில் பிரதிநிதித்துவம் பெற்று – இரண்டு தசாப்தங்கள் யாழ்ப்பாணத்து மக்கள் தொடர்ந்து தெரிவுசெய்த ஓர் உண்மை மக்கள் தொண்டனாக நாட்டை ஆளும் மன்றில் ஈழத் தமிழர்களுக்காக – அவர்களின் உரிமைக்காக – அவர்களின் சத்திய வேட்கைக்காக – மாவையின் குரல் ஒலித்துக்கொண்டே – சிங்கள தேசத்தை அதிரவைத்துக்கொண்டே – இருக்கின்றது.  ஆனால், இன்றும் மாவை நாடாளுமன்றுக்கு என்ன நிலையில் சென்றாரோ, அதே நிலையில் – அதே எளிமை வாழ்வுதான் வாழ்கின்றார் என்பது வெள்ளிடை மலை.

1942 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 27 ஆம் திகதி மாவிட்டபுரத்தில் சோமசுந்தரம் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர் மாவை சோ.சேனாதிராசா. தனது ஆரம்பக் கல்வியை தனது வீட்டுக்கு அருகிலுள்ள வீமன்காமம் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரியிலும் கற்றவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிக் கற்கைகள் ஊடாகக் கலைமாணி பட்டம் பெற்றவர். பின் இந்தியாவில் முதுகலைமாணிப் பட்டம் பெற்றவர்.

1956 ஆம் ஆண்டு காலிமுகத் திடலில் தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து சத்தியாக்கிரகப் போராட்டம் மூதறிஞர் தந்தை செல்வா தலைமையில் நடைபெற்றது. அந்தக் காலத்தில் சிங்கள இராணுவத்தினர் காடைத்தனமாகத் தாக்கியதில் தமிழ் தலைவர்கள் பலர் படுகாயமடைந்தனர். அப்போது தளபதி என்று அனைவராலும் போற்றப்பட்ட அமிர்தலிங்கம் படுகாயங்களுக்கு உள்ளானார். மறுநாள் அதே காயங்களுடன் நாடாளுமன்றில் சென்று எமது இனத்துக்காக வீராவேசமாகக் குரல்கொடுத்தார் அமிர்தலிங்கம்..

இந்தச் சம்பவங்கள் நடைபெற்ற காலத்தில் மாவை சேனாதிராசாவுக்கு வெறும் 14 வயதுகள் மட்டும்தான். வீமன்காமம் மகாவித்தியாலயத்தில் ஒரு மாணவனாகக் கல்விகற்றுக்கொண்டிருந்தார் அவர்.. சிங்கள பேரினவாத அடக்குமுறையாளர்களின் காட்டுமிராண்டித் தனமான செயற்பாடுகளை அறிந்து சிறுவனான மாவை சோ.சேனாதிராசாவின் ஆழ்மனத்து வெந்து தகதகத்தது.

தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து 1956 ஆம் ஆண்டு காலிமுகத் திடலில் நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு தமிழ் உணர்வுள்ள பலர் யாழ்ப்பாணத்தில்  இருந்து சென்று பங்குகொள்வர். பல அரச உத்தியோகஸ்தர்கன்கூட எமது இனவிடுதலைக்கான அஹிம்சைப் போராட்டத்தில் கலந்துவிட்டு மறுநாள் புகையிரதத்தில் வந்து தமது கடமைகளுக்குச் செல்வர். தற்போதைய காலம்போன்று என்ன நடந்தாலும் எமக்கு என்னவென்று இருக்கின்ற காலம் அந்தக் காலத்தில் இல்லை. பெரும்பாலானவர்களிடமும் இனவுணர்வும் தேசியப் பற்றும் இருந்தது.

மாவை சேனாதிராசா, வீமன்காமம் மகாவித்தியாலயத்தில் 14 வயது மாணவனாக கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்தில் அதே பாடசாலையில் கல்வி கற்ற அரசரட்ணம் என்ற ஆசிரியர் காலிமுகத் திடலில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குகொண்டுவிட்டு, மறுநாள் காலை யாழ்வந்ததும், தன் கடமைதவறா பண்பாலும் நேர முகாமைத்துவத்தாலும் பாடசாலை நேரம் அண்மித்ததால் இரத்தக்கறை படிந்த அதே ஆடையுடனும் இரந்தத் தோய்ந்த உடலுடனும் பாடசாலைக்குச் சென்றார்.

அவரது நிலைகண்டு ஏனைய ஆசிரியர்கள் அவரிடம் நடந்தவற்றைக் கேட்டனர். அவர் விவரிக்க, சூழவிருந்த மாவை போன்ற இளமைத்துடிப்பும் இனவுணர்வும் உள்ள மாணவர்களுக்கு இரத்தம் கொதித்தது.

1958 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தில் பல்லாயிரம் தமிழ் மக்கள் உடுத்த உடையுடன் தென்பகுதியில் இருந்து சிங்களக் காடையர்களால் அடித்து விரட்டப்பட்டனர். 16 வயதும் துடிப்பும் மிக்க சிறுவனாக இருந்த மாவை சோ.சேனாதிராசா, இந்தச் சம்பவம் அறிந்து அவர்களைச் சந்திக்கச் சென்றார். காங்கேசன்துறையில் வந்திறங்கிய மக்கள், மாவிட்டபுரத்துக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களில் பலர் தலையில் பலத்த காயங்களுடனும் கை, கால் உடைக்கப்பட்ட நிலையிலும் மிகவும் கோரமாக – காட்டுமிராண்டித் தனமாக – மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு வந்திருந்தார்கள்.  அவர்களின் நிலைமையைக் கண்ட மாவையின் நெஞ்சு பதைபதைத்தது. இரத்தம் கொதித்தது. ஆக்ரோஷமடைந்தவராக சிங்கள அடக்குமுறைக்கு எதிராகப் போராடவேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டார் மாவை.

இதில் வேதனையான விடயம் – மாவையின் மனதைப் பெரிதும் பாதித்த விடயம் – என்னவென்றால், சிறுவர்கள், பெண்கள் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரும் தாக்கப்பட்டிருந்தார்கள். மாவை போன்ற இளைஞர்கள் வந்த மக்களுக்கு மாவிட்டபுரத்தில் வைத்து தாகசாந்தி வழங்கினார்கள். செவ்விளனி மரங்களில் ஏறி இளனி கொய்து, அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்கள். இந்தச் சம்பவங்கள் மாவையை வெகுவாகப் பாதித்தன.

உயர்கல்வியை மாவை சேனாதி, காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரியில் கற்றார். 1961 ஆம் ஆண்டு யாழ்.நகரில் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றது. தமிழ் உணர்வுள்ள அத்தனை மக்களும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குடாநாட்டின் பல பாகங்களிலும் இருந்து பங்குபற்றினார்கள். 1956 – 1958 சம்பவங்களால் நெஞ்சுபொறுக்காமல் மிகவும் கொதித்துப்போய் இருந்த மாவை போன்ற இளைஞர்கள் பலர் காங்கேசன்துறையில் இருந்து பேரணியாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குகொள்வது என முடிவுசெய்தார்கள். மக்களை அணியணியாகத் திரட்டினார்கள். சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு காங்கேசன்துறையில் இருந்து பல இளைஞர்களின் பங்குபற்றலுடன் பேரணி நகர்ந்தது.

பல இளைஞர்களின் பங்குபற்றலோடு 1961 ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தால் 3 – 4 மாதங்கள் இலங்கையின் அரச நிர்வாகம் வடக்கு – கிழ9க்கில் முடக்கப்பட்டது. செய்வதறியாது திணறிய அரசு அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியது. அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி சத்தியாக்கிரகத்தில் பங்குகொண்டோரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது அரசு. இதனால் சத்தியாக்கிரகப் போராட்டம் முறியடிக்கப்பட்டது.

1956 – 1958 சம்பவங்களால் மிகவும் கொதித்துப்போன இளைஞர்களுக்கு இந்தச் சம்பவம் மேலும் ஆத்திரத்தையும் கொதிப்பையும் ஏற்படுத்தியது. இந்த அடக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தௌ இளைஞர்கள் சபதமிட்டார்கள். இதனால் உதயமாகியதே ”ஈழத்தமிழர் இளைஞர் மாணவர் இயக்கம்”.

தொடரும்

தெல்லியூர் சி.ஹரிகரன்

உசாத்துணை:

தமிழ் விக்கிபீடியா
மாவை ஒரு மாபெரும் சரித்திரம்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.