மஹிந்த விசேட அறிக்கை!

“இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் குறிப்பிடத்தக்க அளவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்னமும் முற்றாக ஒழிக்கப்படவில்லை. நாளை திங்கட்கிழமையிலிருந்து இயல்பு நிலையை ஏற்படுத்திய பின்னரும் சில இடங்களில் முடக்கல் நிலையை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும். ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியிருக்கும்.”

– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று விசேட அறிக்கையூடாக அறிவித்துள்ளார்.

“நாளை முதல் நாட்டில் இயல்பு நிலையை படிப்படியாக ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“கொரோனா வைரஸ் பரவுவது குறிப்பிடத்தக்க அளவுக்கு நாட்டில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசு  ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்தும் நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.

நாளை முதல் அரச – தனியார் துறையினர் குறிப்பிடத்தக்க அளவிலான பணியாளர்களுடன் தமது பணிகளை ஆரம்பிப்பார்கள்.

புகையிரதங்கள் மற்றும் பேரூந்துகளில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படும்.

பாடசாலைகளும் தனியார் வகுப்புகளும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

கட்டம் கட்டமாக பணிகளை ஆரம்பிக்கும்போது சமூக விலகல் நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.

சில மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டவேளை மக்கள் சமூக விலகல் நடவடிக்கைகளை பின்பற்றவில்லை. எனினும், அதன் பின்னர் மக்கள் சமூக விலகல் நடவடிக்கைகளின் அவசியத்தை உணர்ந்துகொண்டனர்.

ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்திய பின்னரும் மக்கள் சமூக விலகல் குறித்து அவதானமாகயிருக்க வேண்டும். ஏனெனில், கொரோனா வைரஸ் பரவல் குறிப்பிடத்தக்க அளவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்னமும் முற்றாக ஒழிக்கப்படவில்லை. இயல்பு நிலையை ஏற்படுத்திய பின்னரும் சில இடங்களில் முடக்கல் நிலையை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும். ஊரடங்கை அமுல்படுத்த வேண்டியிருக்கும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.