சுமந்திரனின் காணொளி தொடர்பில் என்னால் வெளியிடப்பட்டதாகச் சொல்லும் செய்தி அவர்களின் ஊகமேயாகும்… (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் – கி.துரைராசசிங்கம்)…
திருவாளர் சுமந்திரன் அவர்களின் குறித்த காணொளி தொடர்பில் யாரும் உங்களுடன் தொடர்பு கொள்ளவில்லையா? என குறித்த ஊடகவியலாளர் கேட்டதற்கு நான் இல்லை என்று கூறிய பதிலை திரிபுபடுத்தி அவரின் ஊகத்தின் அடிப்படையிலேயே கிழக்கிலிருந்து எவ்வித எதிர்ப்பும் வரவில்லை என்று நான் தெரிவித்ததாகக் குறித்த ஊடகவியலாளர் செய்தி வெளியிட்டுள்ளார் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
சுமந்திரன் அவர்களின் குறித்த காணொளி தொடர்பாக கிழக்கிலிருந்து எவ்வித எதிர்ப்பும் வரவில்லை என்று தான் தெரிவித்ததாக வெளிவந்துள்ள செய்தி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று இரவு எனது உறவினர் ஒருவரின் மரண வீட்டில் நான் நின்றிருந்தேன். காலையில் வீடு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கையில் காலை 09.13 மணியளவில் என்னோடு ஊடக நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். திருவாளர் சுமந்திரன் அவர்களுடைய பேட்டியைக் கேட்டீர்களா? என்று கேட்டார். நான் மரண வீட்டில் நின்றிருந்தேன். என்னுடைய கையடக்கத் தொலைபேசியில் இணைய செயற்பாடு செயழிலந்திருந்தது என்றும், வீட்டுக்குச் சென்றதும் காணொளியைப் பார்த்துவிட்டு உங்களோடு தொடர்பு கொள்கின்றேன் என்றும் சொன்னேன். இது தொடர்பில் உங்களோடு யாரும் தொடர்பு கொள்ளவில்லையா என்று கேட்டார். நான் இல்லை என்று பதிலளித்தேன்.
வீட்டுக்கு வந்ததும், இணையத்தின் மூலம் குறித்த காணொளியைப் பார்த்தேன். காணொளியைப் பார்த்ததோடு திருவாளர் சுமந்திரன் அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவர் நீதிமன்றத்தில் நின்றதால் தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் இது தொடர்பில் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களோடு விடயத்தைப் பகிர்ந்து அளவளாவிவிட்டு 10.36 மணிக்கு குறித்த ஊடக நண்பரைத் தொடர்பு கொண்டு மேற்குறித்த விடயங்களைக் குறிப்பிட்டுவிட்டு சுமந்திரன் அவர்கைளத் தொடர்பு கொண்டு நிலவரம் பற்றி அறிந்து தலைவர்களுடனும் தொடர்பு கொண்ட பின்னர் உங்களிடம் தொடர்பு கொள்கின்றேன் என்று குறிப்பிட்டேன்.
நான் சொல்லி முடித்து ஒருசில நிமிடங்களில் எனது நலன்விரும்பி ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு சுமந்திரன் அவர்களின் குறித்த காணொளி தொடர்பாக கிழக்கிலிருந்து எவ்வித எதிர்ப்பும் வரவில்லை என்று நீங்கள் சொன்னதாகச் செய்தி வந்திருக்கின்றது இது உண்மையா என்று கேட்டார். நான் நடைபெற்ற மேற்குறித்த நிகழ்வு பற்றி அவருக்குத் தெளிவு படுத்தினேன். பின்னர் குறித்த ஊடக நண்பருடன் 11.47 மணிக்கு தொடர்பு கொண்டு இந்தச் செய்தி பற்றி வினவினேன். இது பற்றி யாரும் உங்களோடு தொடர்பு கொள்ளவில்லை என்றால் இங்கிருந்து எவ்வித எதிர்ப்பும் வரவில்லை என்று தானே கருத்து என்று கூறினார். இவ்வாறு உங்கள் ஊகத்தின் அடிப்படையில் செய்தி வெளியிடுவது பொருத்தமல்ல என அவருக்குத் தெரிவித்தேன்.
இவைதான் நடந்த விடயங்கள். இவ்வாறிருக்க சுமந்திரன் அவர்களின் கருத்துக்கு கிழக்கில் இருந்து எவ்வித எதிர்ப்பும் வரவில்லை என்று நான் சொன்னதாக அவராகவே ஊகித்து ஒரு செய்தியைப் பிரசுரித்து எமது பெயருக்கக் களங்கம் எற்படுத்த விளைந்துள்ளமை வருந்தத்தக்க விடயம். நாகரீகம் கருதி என்னுடன் தொடர்பு கொண்ட ஊடகவியலாளரின் பெயரைக் குறிப்பிடாமல் இச் செய்தியை மிக மனவருத்தத்துடன் வெளியிடுகின்றேன். இதனை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை